கோயில்களில் இணையவழி முன்பதிவு முறை!

மாண்புமிகு திரு. சேகர்பாபு அவர்கள்,

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்,

தமிழ்நாடு அரசு, சென்னை.

மதிப்பிற்குரிய ஐயா,

 தமிழ்நாட்டின் முக்கியக் கோயில்களில் வெளிப்படையான இணையவழி முன்பதிவு முறையை அமல்படுத்துதல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் கோருதல் – தொடர்பாக.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், அனைத்துத் தரப்பு மக்களும் தொழில்நுட்பத்தோடு ஒருங்கிணைந்துள்ளனர். குறிப்பாக, 10 ரூபாய்க்கும் குறைவான நுண்-பரிவர்த்தனைகள் (Micro-transactions) உட்பட, ஆன்லைன் நிதிச் சேவைகளைப் பயன்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. நமது மாநிலத்தின் நிர்வாகத் திறனுக்கு டிஜிட்டல் ஆளுமையே மிகச்சிறந்த சான்றாகும்.தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் நடைபெற்று வரும் கும்பாபிஷேகம், திருப்பணிகள், கோயில் நிலுவைத் தொகை மீட்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் எனத் தாங்கள் மேற்கொண்டு வரும் சீரிய முயற்சிகளை பாராட்டுகிறோம். இத்தகைய சீரிய நடவடிக்கைகள் தமிழகத்தின் ஆன்மீகப் பாரம்பரியத்தை உலகளவில் கொண்டு சென்றுள்ளன.

 

அதேசமயம், திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி,  மூகாம்பிகை,  தர்மஸ்தலா, உடுப்பி, குருவாயூர் மற்றும் சபரிமலை போன்ற பிற மாநில முக்கிய கோயில்களுடன் ஒப்பிடுகையில், தமிழக அறநிலையத்துறையின் கீழ் உள்ள பல முக்கிய கோயில்களில் தரிசனம் மற்றும் சேவைகளுக்கான இணையவழி முன்பதிவில் வெளிப்படைத்தன்மையும், செயல்திறனும் குறைவாகவே உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் போன்ற முக்கியத் தலங்களில் இன்றும் தரிசன முன்பதிவு தொடர்பாகப் பக்தர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். கோயில் அதிகாரிகளிடம் கூட இது குறித்து போதுமான தகவல்கள் இல்லை.

திருப்பதி போன்ற இடங்களில் உள்ள எளிமையான முறை இல்லாததால், திருச்செந்தூர் உள்ளிட்ட பல கோயில்களில் பக்தர்கள் பரிந்துரைக் கடிதங்களுக்காகவோ அல்லது இடைத்தரகர்களுக்காகவோ காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இடைத்தரகர்களின் ஆதிக்கம் மற்றும் முறையற்ற நடைமுறைகள் கோயில் நிர்வாகத்தின் புனிதத்தைக் கெடுப்பதுடன், பக்தர்களிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பொது விநியோகத் திட்டம், ‘மக்களைத் தேடி மருத்துவம்’, முதியோர் ஓய்வூதியம் போன்ற உயர்தர டிஜிட்டல் சேவைகளுக்கு நேர்மாறாக இக்கோயில் நிர்வாக நடைமுறைகள் இருப்பது வருத்தத்திற்குரியது. இத்தகைய இடைத்தரகர்களைக் களைவதன் மூலம், அவர்களுக்குச் செல்லும் வருமானம் முறையாக கோயில்/அரசின் கணக்கிற்கு வந்து சேரும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

முக்கியக் கோயில்களில் தரிசனம் மற்றும் சேவைகளுக்கென ஒரு வலுவான, வெளிப்படையான மற்றும் சீரான இணையவழி முன்பதிவு முறையை (Uniform Online Booking System) உருவாக்குவது பக்தர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன், ஊழலற்ற நிர்வாகத்திற்குச் சான்றாக அமையும். இது கோயில்களில் நிலவும் தேவையற்ற முறைகேடுகளைத் தடுத்து, உண்மையான பக்திச் சூழலை மீட்டெடுக்க உதவும். கோயில்கள் பற்றிய அனைத்து வரலாற்று மற்றும் முன் பதிவு தகவல்களும் HR & CE மூலம் இந்த வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

 

மேலும், பல புகழ்பெற்ற கோயில்களில் உள்ள பிரசாதக் கடைகளில் சிறிய அளவிலான பிரசாதப் பொட்டலங்கள், poojai porutkal கிடைப்பதில்லை. இதனால் பக்தர்கள் அதிக விலை கொடுத்து அதிக அளவிலான பிரசாதங்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். இது ஏழை எளிய பக்தர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமா கோவில் என்ற எண்ணத்தை பாமர மக்களுக்கு ஏற்படுகிறது. கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரங்களாக மாறக்கூடாது. கோயில்கள் சாதாரண மக்களுக்கும் பக்தி/அருளைக் கொண்டுவரும் வகையில் செயல்பட வேண்டும்.கோயில் நிர்வாகங்களில் நடைபெறும் இத்தகைய முறைகேடுகள் குறித்த வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி பரவி வருகின்றன. இது உள்நாட்டுப் பயணிகள் மட்டுமின்றி, வெளிநாட்டுப் பக்தர்களிடையேயும் அறநிலையத்துறை நிர்வாகம் குறித்துப் பல கேள்விகளை எழுப்புகிறது

 

எனவே, ஆன்மீக மக்கள் பக்தர்களின் நலன் கருதி, தமிழகத்தின் அனைத்து முக்கியக் கோயில்களிலும் வெளிப்படையான, மையப்படுத்தப்பட்ட மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முன்பதிவு முறையை அமல்படுத்த ஒரு விரிவான செயல் திட்டத்தை உருவாக்குமாறு மாண்புமிகு அமைச்சரை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் முறையான நிர்வாகத்தையும், ஊழலற்ற ஆன்மீகச் சேவையையும் உறுதி செய்ய வேண்டுகிறோம்.நுகர்வோர் நலன் மற்றும் கோயில்களின் புனிதத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த கோரிக்கையைத் தாங்கள் பரிசீலிப்பீர்கள் என நம்புகிறோம்.

For Citizens Voice Coimbatore

C.M. Jayaraman      M.M.Rajendran

President                   Secretary