தமிழ் புத்தாண்டு… கோவை முந்தி விநாயகர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்..!!

மிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, கோவையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

கோவை கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டம்

கோயம்புத்தூர்: இன்று (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்புப் பூஜைகள் காலை முதலே நடைபெற்று வருகின்றன. தமிழ்ப் புத்தாண்டு(சித்திரைக்கனி) என்பதால் பொதுமக்கள் அனைவரும் கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கோவையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. முக்கியமாக புலியகுளம் விநாயகர் கோவில், கோனியம்மன் கோவில், மருதமலை, பேரூர் பட்டீசுவரர் கோவில், தண்டு மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் அதிகாலையிலிருந்தே பக்தர்கள் அதிக அளவு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.

புலியகுளத்தில் உள்ள விநாயகர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உலகப் புகழ் பெற்ற 19 அடி உயரம் 190 டன் எடை கொண்ட, ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய முந்தி விநாயகர் சிலைக்குச் சித்தரைக் கனியை முன்னிட்டு ஆப்பிள், ஆரஞ்சு, பலாப்பழம் அன்னாசி, வாழைத்தார், மாதுளை, கொய்யா என 2 டன் அளவிலான பழங்களைக் கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதே போல், கோவையில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கும், அருள்மிகு தண்டு மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், சித்திரைக்கனியை முன்னிட்டு தண்டு மாரியம்மனுக்கு 21 வகை பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் நடை முழுவதும் பழத்தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே நிரம்பி, அம்மனுக்குத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ள நிலையில், கொரொனா தொற்று நீங்கவும், மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன.