சென்னை: தமிழ்நாட்டின் ‘ஹாட் ஆப் த சிட்டி’ தியாகராய நகர். ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களும் பண்டிகைக் காலங்களில் வந்து குவியும் வணிக தளம்.
ஆனால், மழை வந்தால் முழங்காலுக்கு மேல் தரையில் தண்ணீர் பாயும். போக்குவரத்து முழுக்க ஸ்தம்பித்து நிற்கும். தலைநகரின் வணிக நகரத்திற்கு இந்த நிலைமையா? எனக் குரலை உயர்த்துவதை பலரும் கேட்டிருக்கலாம்.
ஆனால், இந்த அழுகுரல் எல்லாம் ஒலித்தது ஒரு காலம். குறிப்பாக இந்த ஒன்றரை வருட திமுகவின் புதிய ஆட்சியில் புதிய உலகமாக மாறி இருக்கிறது தி.நகர். அதை பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தனே ஒப்புக் கொண்டுள்ளார்.
மழை வந்தால், வெள்ளக்காடாக மாறும் தி.நகர் இன்று எந்த மழைக்கும் சொட்டு தண்ணீர் நிற்காத நகராக மாறி இருக்கிறது. மழை பெய்த அரை மணிநேரத்திற்குள் அவ்வளவு நீரும் வெளியேற்றப்படும் அளவுக்கு புதிய கட்டமைப்பைக் கொண்டு மாற்றி அமைத்திருக்கிறது சென்னை மாநகராட்சி. இந்த மாற்றம் மழை வெள்ளத்தில் மட்டும் இல்லை. மக்கள் மனதிலும்தான். இன்று தி.நகர் தொகுதி ‘மின்வெட்டு’ இல்லாத தொகுதியாக மாற்றமடைந்துள்ளது.
தி.நகரைச் சுற்றி பாண்டி பஜார், பனகல் பூங்கா, உஷ்மான் சாலை, ரங்கநாதன் சாலை, முத்துரங்கன் சாலை, கேனால் பேங் ரோடு, மூன்றாவது மெயின் ரோடு, மூசா தெரு, ஆரிய கெளடா சாலை, பிருந்தாவன் தெரு என்று எப்போதும் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது. இந்த சாலைகளில் பல இடங்களில் பல ஆண்டுகளாக உள்ள பெருமரங்களின் கிளைகள் மழைக்காலங்களில் உடைந்துவிழும்போது மின்வெட்டு என்பது மிகச் சாதாரணமாக இருக்கும்.
மேலும் அதிக அளவுக்கு வணிக வளாகங்கள் நிறைந்த பகுதிகள் என்பதால் அடிக்கடி மின் அழுத்தம் குறைவாக இருக்கும். இதனால் பலரது தொழில் பாதிக்கப்படுவதோடு வர்த்தகமும் பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்து வந்தன. ஆனால், திமுக ஆட்சி வந்த பிறகு இந்தத் தொகுதிகளில் பல இடங்களில் மின் மாற்றிகளை புதியதாகப் பொருத்தி உள்ளனர். அதன் காரணமாகக் குறைந்த மின் அழுத்தப் பிரச்சினை என்பது சுத்தமாகக் குறைந்துள்ளது.
பொதுவாக மழைக்காலங்களில் தரையின் தாழ்வான தளம் அமைக்கப்பட்டிருந்த மின் இணைப்பு பெட்டிகள் எளிதாக மூழ்கும் நிலையே இதுவரை நீடித்து வந்தது. ஆகவே மின் இணைப்பும் துண்டிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருந்தது.
ஆனால் இப்போது தி.நகரிலுள்ள அனைத்து மின் இணைப்பு பெட்டிகளின் உயரமும் உயர்த்தப்பட்டுள்ளன. ஆகவே மழை வெள்ளக் காலங்களில் மூழ்கும் அபாயம் தடுக்கப்பட்டுள்ளது என்கிறார் மேற்கு மாம்பலம் உதவிப் பொறியாளர் பாண்டிய ராஜன்.
இதே பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஒருவர் இந்த மாற்றம் குறித்துப் பேசும் போது, இந்த மழை வெள்ளத்தின் போது மின்வெட்டு என்பது கொஞ்ச நேரம் கூட இல்லை. எல்லா மின் இணைப்பு பெட்டிகளின் பில்லரும் உயர்த்தப்பட்டதால் எந்தத் தடையும் இல்லாமல் மின்சாரம் பெற்றோம். கடந்த ஆட்சியின் போது எல்லாம் மழை வந்தால் வெள்ளம் வடிய ஒரு வாரம் வரைகூட ஆகும். அந்த நிலை இந்த ஆட்சிக்காலத்தில் இல்லை. இரவு பகலாக மந்திரிகள் களப்பணியில் இருந்து வேலை செய்வதை நானே பார்த்தே என்கிறார்.
“இந்தப் பகுதியில் மொத்தமாக மின் அழுத்தம் என்பது 80% அளவுக்கு இருந்தது. இது அதிக லோடு. முத்துரங்கன் சாலையில் வளிமகாப்பு துணை மின்நிலையம் அமைத்ததால் இந்த அழுத்தம் முற்றிலும் 30% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் மின்வெட்டு, குறைந்த மின் அழுத்தம் பிரச்சினை இல்லை. ஏறக்குறைய 3 கி.மீட்டர் அளவுக்கு கார்பரேஷன் காலனி பகுதியில் மட்டும் புதிய வயர்கள் சாலைகளில் பதிக்கப்பட்டு உள்ளன. அதேபோல் முத்துரங்கன் சாலையில் இரண்டு ஃபீடர் போட்டு கொடுத்துள்ளோம். அது இப்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த ஒரு ஆண்டிற்குள் இத்தனை மாற்றத்தையும் செய்து முடித்துள்ளோம்.
போன ஆண்டு வடகிழக்கு மழையில் அதிகமாகத் தண்ணீர் இந்தப் பகுதியில் தேங்கியது. அப்போது மின் இணைப்பு பெட்டிகள் தாழ்வாக இருந்ததால், கடுமையான மின்வெட்டுக்கு மக்கள் ஆளாகினர். அந்த நிலையை மனதில் கொண்டு இப்போது கிட்டத்தட்ட 118 மின் இணைப்பு பெட்டிகளின் பில்லர்கள் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மழையில் மின்வெட்டே வரவில்லை.
அதேபோல் பல காலமாக இருந்து வந்த பழைய கேபிள்களை எல்லாம் தோண்டி எடுத்துவிட்டோம். குறிப்பாக மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் உள்ள கேபிள்கள் ஒன்று விடாமல் மாற்றிக் கொடுத்துவிட்டோம். இதனால் மின்சாரம் செல்வதற்கான தடைகள் முற்றிலுமாக சீர் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பழைய டிரான்ஸ்ஃபார்மர் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன. முன்பு 100 கேவி அளவுக்குத்தான் மின்மாற்றிகள் இருந்தன. இப்போது 250 கேவி அளவுக்கு மாற்றியமைத்துள்ளோம். 11 டிரான்ஸ்ஃபார்மர்களின் கொள்ளளவை அதிகப்படுத்தி உள்ளோம்” என்கிறார் பாண்டிய ராஜன். தி.நகர் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், “இந்தப் பகுதியில் மட்டும் 28 ஆயிரத்து 228 மின் இணைப்புகள் இருக்கின்றன. ஹெச்.டி. சர்வீஸ் 44 உள்ளது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் இந்தத் தொகுதியிலுள்ள மின் பிரச்சினைகளுக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டு, அனைத்து தடைகளும் சரிசெய்யப்பட்டுள்ளன.
முன்பு எல்லாம் பழைய மின்சாதன பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இந்த ஆட்சியில் அனைத்தும் நவீனத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி உள்ளோம். ஆகப் பழைய மாதிரி மின்மாற்றிகளில் தீப்பொறி வருவதில்லை. இந்த மாற்றிகள் சாலைகளில் பார்ப்பதற்குப் பீரோ மாதிரி இருக்கும். இதில் அந்தத் தீப் பொறிகள் எழாது. ஆகவே அதனை முற்றிலுமாக மாற்றி அமைத்துக் கொண்டுள்ளோம்” என்கிறார்.
அசோக் நகர் கிழக்குப் பிரிவில் உதவிப் பொறியாளராக பணிபுரிந்து வரும் ஒரு மின் ஊழியர், “தி.,நகர் பகுதிக்கு உட்பட்ட கிழக்குப் பிரிவில் மட்டும் 18 ஆயிரம் மின் நுகர்வோர்கள் இருக்கிறார்கள். இந்தப் பகுதியில் கடந்த ஆட்சி வரை சுமார் 3 கி.மீட்டர் தூரத்திற்கு மின்கம்பிகள் கம்பங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வந்தன.
ஆனால் அதை அனைத்தையும் இப்போது புதைகுழி பாதை வழித்தடமாக மாற்றி அமைத்துள்ளோம். மேலும் இதுவரை 2 டிரான்ஸ்ஃபார்மர்கள்தான் மின்சாரத்தை வழங்கி வந்தன. அதனால் மின் பிரச்சினைகள் இருந்துவந்தன. அங்கே இப்போது 2 டிரான்ஸ்ஃபார்மர்கள் புதியதாக அமைத்துக் கொடுத்துள்ளோம். இந்த மாற்றத்தால் மின் அழுத்தம் குறைக்கப்பட்டுள்ளது. மின் கசிவும் தடுக்கப்பட்டுள்ளது” என்று கூறுகிறார்.
தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. கருணாநிதி, “தி.நகரில் மட்டும் ஒட்டுமொத்தமாக 81 டிரான்ஸ்ஃபார்மர்கள் அமைத்துக் கொடுத்துள்ளோம். அனைத்தும் நவீன மின்மாற்றிகள். அதைப் பயன்படுத்துவதும் பழுது பார்ப்பதும் மிக எளிது. மக்களுக்கு அதனால் எந்த இடையூறுகளும் இருக்காது. முற்றிலுமாக ஒரு பீரோவை போல் மூடப்பட்டுள்ளதால், காகங்கள், பறவைகள் அடிப்பட்டு இறப்பது, அதனால் மின்கசிவு ஏற்படுவது, மின் வெட்டு நிகழ்வது என அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளன. தி.நகர் தொகுதியில் மட்டும் 300 மின் இணைப்பு பெட்டிகளின் பில்லர்களை உயரப்படுத்தி மாற்றி அமைத்துள்ளோம். இன்னும் 260 பில்லர் பாக்ஸ்கள் உயர்த்தப்பட வேண்டிய வேலைகள் நடைபெற்று வருகின்றன. சி.ஐ.டி. நகரில் கூடுதலாக ஒரு மின்நிலையம் அமைக்கும் வேலைகள் நடந்துகொண்டுள்ளன” என்கிறார்.
Leave a Reply