தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று தொடங்குகிறது.
இதுதொடர்பாக தில்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது….
இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக 2002-04 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு, பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த வகையில்,தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அந்தமான் – நிகோபர், இலட்சத்தீவு, சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்திய பிரதேசம், இராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும்.
தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 68,467 வாக்குச்சாவடிகள் உள்ளன. புதுச்சேரியில் 10.21 இலட்சம் வாக்காளர்கள், 962 வாக்குச்சாவடிகள் உள்ளன. 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 51 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
திருத்தப் பணி நடைபெற உள்ள 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அக்டோபர் 27 ஆம் தேதி நள்ளிரவுடன் வாக்காளர் பட்டியல் முடக்கப்படும்.
28 ஆம் தேதி (இன்று) முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கப்படும். இதன்படி அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய படிவங்கள் வழங்கப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். தகுதி இல்லாத வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். குறிப்பாக இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ளவர்கள், உயிரிழந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
திருத்தப் பணியின்போது, ஆதார் அட்டை ஓர் அடையாள ஆவணமாக மட்டுமே ஏற்கப்படும். குடியுரிமை, பிறந்த தேதிக்கான சான்றாக ஏற்கப்படாது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு தேர்தல் அலுவலர் (பிஎல்ஓ) பணியில் ஈடுபடுவார்.
அவர் வீடு வீடாகச் சென்று, படிவங்களை வழங்கி, வாக்காளர்களின் விவரங்களைச் சேகரிப்பார். ஒவ்வொரு பிஎல்ஓவும் ஒரு வீட்டுக்கு 3 முறை வருவார்.இணையதளம் வாயிலாகவும் படிவங்களைச் சமர்ப்பிக்கலாம்.
அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. ஆனால், மாநில மக்களின் குடியுரிமை ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டுள்ளதால், அங்கு சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்த அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.





