தமிழர் பாரம்பரியம் உலகம் முழுவதும் காட்டப்பட்டுள்ளது… நான் தமிழனாக பெருமை கொள்கிறேன் -முதல்வருக்கு பாராட்டுக்கள்- அண்ணாமலை பேச்சு..!!

சென்னை: ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

செஸ் ஒலிம்பியாட் தொடரைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அதன் பின்னர் நேரடியாக ஆளுநர் மாளிகைக்குச் சென்றார்.

அப்போது அங்குப் பிரதமர் மோடியைத் தமிழக பாஜக தலைவர் தலைமையிலான உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சுமார் 9.30 மணி அளவில் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் இரவு 11 மணி வரை தொடர்ந்ததாகவே தெரிகிறது. அதன் பின்னர் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை மோடி உடனான சந்திப்பு குறித்துப் பேசினார். இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில், “கட்சியின் மூத்த நிர்வாகிகள், பழைய நிர்வாகிகள் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த நேரத்தில் தமிழகத்தில் தேர்தல் போன்ற அரசியல் நிகழ்வுகள் எதுவும் இல்லை. எனவே, பிரதமர் மோடி உடன் இன்று நாங்கள் அரசியல் பேசவில்லை” என்றார்.

தொடர்ந்து திமுக உடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, “பாஜக எப்போதும் கொள்கை ரீதியாகச் செல்லும் கட்சி. எங்கள் கொள்கையை பாஜக ஒருபோதும் மாற்றிக் கொள்ளாது. கடந்த முறை பிரதமர் சென்னை வந்து இருந்த போதே, முதல்வர் பெரிய மனதோடு நடந்து இருக்க வேண்டும் என்றும் அது அரசியல் களம் இல்லை என விமர்சித்து இருந்தேன். ஆனால் இன்று நான் முதல்வரைப் பாராட்டுகிறேன். எப்போதும் ஆளும் கட்சியை விமர்சித்துக் கொண்டு இருக்கத் தேவையில்லை.

நமது கலாச்சாரத்தைப் பெருமைப்படுத்தும் வகையில் நேற்று  நிகழ்ச்சி நடைபெற்றது. 5000 ஆண்டுக்கால கலாசாரம் இந்த நிகழ்ச்சியில் பிரதிபலித்தது. இதற்காகத் தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் பாஜக சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிகழ்ச்சியைப் பாராட்டுவதால் கூட்டணி என்று அரத்தம் ஆகாது.

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள் தொடர்பாக மதுரை ஐகோர்ட் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. மிகச் சரியான தீர்ப்பு அது. நேற்று மாலை முதலே தமிழக அரசு தனது தவறை சரி செய்யத் தொடங்கி இருந்தது. விளம்பரங்களில் நேற்று முதலே பிரதமர் படம் இடம் பெற்று இருந்தது. பாஜக ஒரு கட்சியாகப் பிரதமர் படத்தை வைக்க வேண்டும் எனக் கேட்கவில்லை. சில தொண்டர்களை அதைக் கேட்டிருக்கலாம். கட்சியாக நாங்கள் பிரதமர் படத்தைப் போட வேண்டும் எனக் கேட்கவில்லை.

தமிழக மக்கள் அன்பைப் பெற்று ஆட்சிக்கு வரும் போது, அதை நாங்கள் செய்வோம். ஆளும் கட்சி தானாகச் செய்ய வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தோம். மதுரை ஐகோர்ட் தீர்ப்பு முக்கியமானது. வரும் காலத்தில் தமிழகம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. இந்த சூழலில் மதுரை ஐகோர்ட் தீர்ப்பு முக்கியமானதாகப் பார்க்கிறோம். அந்தத் தீர்ப்பை வைத்தும் அரசியல் பேச விரும்பவில்லை.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் முதல்வர் போல நடந்து கொண்டார். கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் கட்சித் தலைவரைப் போல நடந்து கொண்டார் என விமர்சித்து இருந்தேன். ஆனால், இந்த முறை தான் அவர் முதல்வர் போல நடந்து கொண்டார். நான்  தமிழனாக நான் பெருமை கொள்கிறேன். தமிழர் பாரம்பரியம் உலகம் முழுவதும் இன்று காட்டப்பட்டு உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.