தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ₹100 கோடிக்கும் அதிகமாகப் பண மோசடி செய்த வழக்கில், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லம் உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பதிவு செய்யப்படாத தனியார் பள்ளிகளின் சங்கத்தை நடத்தி வந்த பி.டி. அரசுக்குமார் என்பவர், அரசு உயர் அதிகாரிகளுடன் தனக்குத் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறி பள்ளி நிர்வாகிகளிடம் ₹100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டார். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பல்வேறு பள்ளி உரிமையாளர்கள் அளித்த தொடர் புகார்களின் அடிப்படையில், கடந்த ஜூன் 27-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் பி.டி. அரசுக்குமார் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஜூலை மாதத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பி.டி. அரசுக்குமார் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள முத்துக்குமார் என்பவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவருக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்கியது தொடர்பாகப் பல்வேறு தனியார் பள்ளி நிறுவனர்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக எழுந்த குற்றச்சாட்டுகள், மத்திய குற்றப்பிரிவிற்குத் தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த முதல் கட்ட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட அரசுக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், அன்றைய பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் இந்த ₹100 கோடி மோசடிக்கும் நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று காலை திருச்சியிலுள்ள அன்பில் மகேஷின் இல்லம், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இடங்கள் என மொத்தம் 6 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையைத் தொடங்கினர்.
மேலும் தன் மீதான லஞ்சக் குற்றச்சாட்டுகளை அன்பில் மகேஷ் ஏற்கனவே மறுத்து, இது பொய்ப் புகார் என்று கூறியிருந்த நிலையில், தற்போது நடைபெறும் இந்தச் சோதனை வழக்கு விசாரணையின் அடுத்தகட்ட முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.மேலும் சோதனையின் போது கைப்பற்றப்படும் ஆவணங்கள், அன்பில் மகேஷிற்கும் பி.டி. அரசுக்குமாருக்கும் இடையே இருந்த தொடர்புகள் குறித்துகாவல்துறையின் முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நடவடிக்கை காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் நடைபெற்று வருவதாக திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.








