முன்கூட்டியே வருகிறது கோடை விடுமுறை…

சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள் முன்கூட்டியே நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 11 ஆம் தேதியும் தொடங்கியது. அதேபோல், 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதி பருவத் தேர்வுகள் ஏப்ரல் 10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதற்கிடையே தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வகுப்பறைகள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட உள்ளதால், 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்திருந்தது.ஆசிரியர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதால், தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி முழு ஆண்டுத் தேர்வுகளை, திட்டமிட்டதை விட முன்னதாகவே நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித் துறை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கான தேர்வுக்கால அட்டவணை தயாரிக்கப்பட்டு துறையின் செயலர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓரிரு நாட்களில், புதிய அட்டவணை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.