தமிழகத்தை நோக்கி வருகிறது மாண்டஸ் புயல்- 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்..!

சென்னை: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறுகிறது.

மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறும் நிலையில் டிசம்பர் 8 ஆம் தேதி இது புயலாகவும் தீவிரமடைகிறது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்படுகிறது. இந்த பெயரை ஐக்கிய அரபு நாடுகள் பரிந்துரைத்துள்ளது.

இந்த புயல் மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வட தமிழக கடலோரம் அருகே வரும் என எதிர்பார்க்கப்படுதிறது. இதற்காக வடதமிழக கடலோரத்தில் உள்ள மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது. சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் இன்று விரைந்துள்ளனர். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. இவர்கள் புயல் , வெள்ள காலத்தில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்டெடுப்பர்.