இலங்கையின் கடற்படையின் தொடரும் அட்டூழியம்: வேலை நிறுத்தத்தில் தமிழக மீனவர்கள்.. 1,300 படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தம்..!

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களின் படகுகளை அடித்து சேதப்படுத்துவதுடன், வலைகளை அறுப்பதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்த சம்பவங்களை தடுத்து நிறுத்த கோரி மத்திய – மாநில அரசுகளுக்கு மீனவ சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இருந்தும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 27ம் தேதி சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றனர். தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகையும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களையும் கைது செய்தனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரையும் முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மைக் காலமாக மீனவர்கள் கைது செய்யப்படுவது மீண்டும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே நாகையைச் சேர்ந்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீனவ சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ஆறு மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும், கடந்த 2018 ஆண்டிலிருந்து தற்போது வரை இலங்கை வசமுள்ள விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பாரம்பரிய கடல் பகுதியில் மீனவர்கள் பிரச்சினை இல்லாமல் மீன் பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் காரணமாக 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் 800க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் கடலுக்குச் செல்லாமல் கரையோரங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.