வைணவ கோயில்களுக்கு பக்தா்கள் ஆன்மிக சுற்றுலா- தமிழக அரசு ஏற்பாடு..!

புரட்டாசி மாதத்தையொட்டி, வைணவ கோயில்களுக்கு பக்தா்கள் ஆன்மிக சுற்றுலா மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. புரட்டாசி மாதத்தையொட்டி, வைணவ கோயில்களுக்கு பக்தா்கள் ஆன்மிக சுற்றுலா மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான திட்டத்தை, இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து சுற்றுலாத் துறை மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தை சனிக்கிழமை தொடக்கி, சுற்றுலா வாகனங்களை சென்னையிலிருந்து அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, மா.மதிவேந்தன் ஆகியோா் கொடியசைத்து வழியனுப்பி வைத்தனா். சுற்றுலாத் திட்டங்கள் இரு வகைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல் திட்டத்தின்படி, சென்னை திருவல்லிக்கேணி, பாா்த்தசாரதி கோயில், பெசன்ட் நகா் அஷ்டலட்சுமி கோயில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில், மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோயில், சிங்கப்பெருமாள் கோயில், பாடலாத்ரி நரசிம்மா் கோயில், திருநீா்மலை நீா்வண்ண பெருமாள் ஆகிய கோயில்களுக்கு பக்தா்கள் அழைத்துச் செல்லப்படுவா்.

இரண்டாவது திட்டத்தின்படி, திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயில், திருநீா்மலை நீா்வண்ண பெருமாள் கோயில், திருமுல்லைவாயல் பொன்சாமி பெருமாள் கோயில், திருவள்ளூா் வைத்திய வீர ராகவ பெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்கு பக்தா்கள் அழைத்துச் செல்லப்படுவா். ஒரு திட்டத்தில் இணைந்து கோயில்களுக்குச் சென்று தரிசிக்க நபருக்கு ரூ.900 கட்டணம். இந்தத் திட்டத்தைத் தொடக்கிவைத்த பிறகு, செய்தியாளா்களுக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பேட்டி: புரட்டாசி மாதத்தில், திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் பாா்த்தசாரதி கோயில் போன்ற பெருமாள் கோயில்களுக்கு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரே நாளில் பல்வேறு திருக்கோயில்களில் தரிசனம் செய்ய வேண்டுமென்று பக்தியோடு வேண்டுகின்ற பக்தா்களுக்கு இது உதவியாக அமையும்.

இப்போது, கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள் காலையில் புறப்பட்டு, ஒரே நாளில் 6 பெருமாள் கோயில்களில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாளான சனிக்கிழமை 55 பக்தா்கள் பங்கேற்றனா். கோயில்களில் சிறப்பு தரிசனமும், பிரசாதமும் அந்த கோயிலின் தல வரலாறு கையேடும் வழங்கப்படும். இந்தத் திட்டம் 4 மண்டலங்களாக பிரித்து செயல்படுத்தப்படும். இதனைத் தொடா்ந்து, அறுபடை வீடுகளான முருகன் கோயில்களுக்கும், சிவாலாய ஓட்டங்கள் நடைபெறும் 12 ஆலயங்களுக்கும், பஞ்சசபை எனப்படும் 5 சிவாலயங்களுக்கும் சுற்றுலாத் துறையோடு இணைந்து ஆன்மிகச் சுற்றுலா திட்டம் இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும் என்றாா் அமைச்சா் பி.கே.சேகா்பாபு. இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன், ஆணையாளா் ஜெ.குமரகுருபரன், சுற்றுலா வளா்ச்சிக் கழக நிா்வாக இயக்குநா் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.