கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெடும்பாறையை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி தங்கமணி ( வயது 45) இவர்கள் தற்போது கோவை சுந்தராபுரத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களின் மகள் நந்தினி. இவர் 10 ஆண்டுகளுக்கு முன் மணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளார் .இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் -மனைவி இருவரும் பிரிந்து விட்டனர் .இதையடுத்து நந்தினி 3 ஆண்டுகளுக்கு முன்பு நெடும்பாறையை சேர்ந்த கள் இறக்கும் தொழிலாளியான ரவி ( வயது 36 )என்பவரை 2 – வது திருமணம் செய்து கொண்டார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு நந்தினி கணவரிடம் கோபித்துக் கொண்டு கோவை சுந்தராபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று முன் தினம் இரவு நந்தினி நெடும்பாறையில் கணவர் வீட்டில் உள்ள துணிகளை எடுப்பதற்காக தன் தாய் தங்கமணியுடன் வந்தார் .அப்போது வீடு பூட்டி கிடந்தது இதனால் ரவியை அழைத்து வீட்டு சாவி கொண்டு வருமாறு கூறியுள்ளனர் .இதைத் தொடர்ந்து ரவி வீட்டுக்கு வந்து சாவியை கொடுத்தார். உடனே வீட்டுக்குள் சென்ற நந்தினி துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அவரிடம் சென்ற ரவி இனிமேல் சண்டை போடாமல் வாழ்கிறேன் என்று சமாதானம் பேசினாராம். இது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டின் கதவின் மேல் வலது கையை வைத்தபடி மாமியார் தங்கமணி நின்று கொண்டிருந்தார். இதற்கிடையில் ஆத்திரமடைந்த ரவி அரிவாளை எடுத்து மாமியார் தங்கமணியின் வலது கையை வெட்டினார். இதில் கை இரு துண்டானது .ரத்த வெள்ளத்தில் துடித்த தங்கமணியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். துண்டிக்கப்பட்ட கையை ஒரு பிளாஸ்டிக் கவரில் எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பொள்ளாச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியாரை வெட்டிய மருமகன் ரவியை கைது செய்தனர்..இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மாமியார் கையை அரிவாளால் வெட்டி துண்டாக்கிய மருமகன் கைது..!
