பாஜக ஆட்சிக்கு வந்ததால் இந்து அறநிலையத் துறையே இருக்காது – அண்ணாமலை.!!

திருவள்ளூர்: கோவில் உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை, அறநிலையத்துறை அதிகாரிகளின் கேளிக்கைக்கு செலவாகிறதே தவிர, ஆன்மீக மேம்பாட்டுக்கு இல்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால்தான், பாஜக ஆட்சிக்கு வந்ததும், அறநிலையத் துறை கலைக்கப்படும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறோம் என்றும் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களேஉள்ள நிலையில் ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பிலான பாதயாத்திரையை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார் அண்ணாமலை. கடந்த ஜூலை மாதம் ராமேஸ்வரத்தில் பாதயாத்திரையை தொடங்கினார் அண்ணாமலை. இன்னும் சில நாட்களில் பாத யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டப்போகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை திமுக அரசை கடுமையாக சாடினார். தன்னை லேகியம் விற்பவன் என்று சொன்ன ஆர்.பி உதயகுமாருக்கு பதிலடி கொடுத்தார். தனது பாதயாத்திரை குறித்து எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.

பிரசித்தி பெற்ற திருவேற்காடு கருமாரியம்மன் வாழும் ஆவடி சட்டமன்ற தொகுதியில், பெரும் எழுச்சியோடு பொதுமக்கள் சூழ, ஒரு மாநாடு போல சிறப்பாக நடைபெற்றதில் பெரும் மகிழ்ச்சி.

நம் எல்லோரையும் காக்கும் ஆதி சக்தியாக அன்னை கருமாரி விளங்குகிறாள். ஆனால், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கோவில் அவல நிலையில் உள்ளது. எப்படி பகுதிநேர ஆசிரியர், தற்காலிக செவிலியர்கள் நியமிப்பார்களோ, அதுபோல, கோவில் நிர்வாகம் தற்காலிக அர்ச்சகர் நியமித்து, அவர் நேற்று அம்மன் கழுத்தில் இருக்கும் 8 சவரன் நகையைத் திருடி பிடிபட்டிருக்கிறார். கண்காணிப்பு கேமரா இருக்கும் காரணத்தினால் அவர் பிடிபட்டார்.

பழனி கோவில் தேவஸ்தான நிர்வாக கடையில், காலாவதியான பிரசாதத்தை பக்தர்களுக்கு விற்பனை செய்துள்ளார்கள். திருச்செந்தூர் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த 5,309 பசு மாடுகளைக் காணவில்லை. தமிழகம் முழுவதும் கோவில்களுக்குச் சொந்தமான 2 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் காணவில்லை. கோவில் உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை, அறநிலையத்துறை அதிகாரிகளின் கேளிக்கைக்கு செலவாகிறதே தவிர, ஆன்மீக மேம்பாட்டுக்கு இல்லை. இதனால்தான், பாஜக ஆட்சிக்கு வந்ததும், அறநிலையத் துறை கலைக்கப்படும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறோம்.

கடந்த 1961ஆம் ஆண்டு, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முயற்சியால் ஆவடிக்கு கொண்டுவரப்பட்டது தான் ஆவடி ராணுவ தொழிற்சாலை. காங்கிரஸ் ஆட்சியில், பாதுகாப்பு தொடர்பான தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. நமது பிரதமர் மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, “மேக் இன் இந்தியா” திட்டத்தின் மூலம் பெரும் பலனடைவது, இந்தத் தொழிற்சாலையும், இங்குள்ள பணியாளர்களும்தான்.

கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ராணுவத்தின் தேவைக்கு சென்னை ஆவடி ராணுவத் தொழிற்சாலைக்கு அர்ஜுன் ரக டேங்குகள் தயாரிக்க 7,523 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆவடி ராணுவத் தொழிற்சாலை புத்துயிர் பெற்றுள்ளது

ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் அவர்கள். வாய் கோளாறு அமைச்சர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். ஆனால், தற்போதைய பால் வளத்துறை அமைச்சருக்கு, ஆவடி நாசரே பரவாயில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். அதிகபட்சம், கட்சிக்காரர்களை கல்லால் அடிப்பார், பலமுறை பால் மற்றும் பால் பொருட்களின் விலையை ஏற்றி, அதற்கு மத்திய அரசு மீது பழியை போட முயற்சிப்பார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், இவருக்கு சம்மந்தமே இல்லாத துறையிலும் கமிஷன் வாங்குவார். திமுகவில் மற்றவர்கள் செய்யாததை ஒன்றும் இவர் செய்துவிடவில்லை. கூட்டமாகச் சேர்ந்து கொள்ளை அடிக்கத்தானே திமுக என்ற கட்சியை நடத்துகிறார்கள். ஆவடி நாசரையும் உடனடியாக துறை இல்லாத அமைச்சராக திமுக அறிவிக்க வேண்டும்.

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில், கக்கன், லூர்தம்மா பிரான்ஸிஸ், பரமேஸ்வரன், சி.சுப்பிரமணியம் என கறைபடாத கரங்களுக்குச் சொந்தமானவர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள். இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார்கள். ஆனால் இன்று ஒரு அமைச்சரையாவது முன்னுதாரணமாக எடுக்க முடியுமா? உதயநிதியைப் போல தங்கள் குழந்தை வர வேண்டும் என்று எந்தப் பெற்றோராவது விரும்புவார்களா?

திமுகவின் ஒட்டுண்ணியாக இருக்கும் கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் தனியாக நின்றால் தமிழகத்தில் 12 இடங்கள் வெற்றி பெறுவோம் என்கிறார். தனியாக நின்றால் இந்தியா முழுவதுமே 12 இடங்கள் வாங்க மாட்டார்கள். விசிக தலைவர் திருமாவளவன், ஆறு மாதம் முன்பு வரை, கருவறைக்குள் பிராமணர் அல்லாதவர்கள் நுழைய வேண்டும் என்றார்.

தற்போது, பிராமணரல்லாத நமது பிரதமர் மோடி அவர்கள், அயோத்தி ராமர் கோவிலில் பிராணப் பிரதிஷ்டை செய்தபோது, அது தவறு என்கிறார். ஏழைகளுக்கான கட்சி என்று கூறிக்கொள்ளும் கம்யூனிஸ்டுகள், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடிக்காக, நீதிபதிகளைக் குற்றம் சொல்கிறார்கள். பச்சோந்தியை விட வேகமாக நிறம் மாறுபவர்கள் திமுகவின் கூட்டணிக் கட்சிகள் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.