பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தணுமா… அண்ணாமலை ஆவேசம்.!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக விடுமுறை அளித்திருப்பதை கடுமையாக விமர்சித்துள்ளார்.பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை

அண்ணாமலை தனது பதிவில், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக எந்தத் துறை நிர்வாகத்தையும் சரியாக கவனிக்காமல், வெற்று விளம்பரங்களிலேயே திமுக அரசு நாட்களை கழித்துவிட்டது. இப்போது ஆட்சி முடியும் தருவாயில் ‘குறை தீர்க்கும் முகாம்’ என்ற பெயரில் அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்களைச் செயலிழக்கச் செய்து வருகின்றனர், என்று தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரசியல் முகாம் நடத்துவது எந்த விதத்திலும் நியாயமல்ல. இது, பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களை பலிகடா ஆக்குவதைப் போல உள்ளது. திமுக அரசுக்கு இது போன்ற அகம்பாவம் எங்கிருந்து வருகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு முன் திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் பகுதியில் நடந்த அதே போன்ற சம்பவத்தையும் நினைவூட்டினார். அப்போது அந்தப் பள்ளிக்கும் விடுமுறை அளித்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டதை பாஜக கண்டித்ததாகவும், அப்போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் இனிமேல் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறாது என்று உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அந்த உறுதிமொழியை அமைச்சர் புறக்கணித்துள்ளார். கல்வித் துறையின் முக்கிய பொறுப்பை ஏற்றுள்ள அவர், தற்போது ஒவ்வொரு மாதமும் வெளிநாட்டுச் சுற்றுலாவில் பிசியாக இருப்பது வருத்தம் தருகிறது, என அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், முகாம்களில் மக்களிடமிருந்து பெற்ற மனுக்களை வைகையாற்றில் மிதக்க விட்டுவிட்டார்கள். அவற்றில் ஒன்றுக்கும் தீர்வு வழங்கப்படவில்லை. இப்போதும் அதே போல கண்துடைப்பு விளம்பரங்களால் மக்களை ஏமாற்றுவதுதான் நடக்கிறது. இது வெட்டிவிளம்பர ஆட்சி தவிர வேறில்லை, எனக் கூறியுள்ளார்.

முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களே, மக்கள் நலனுக்காக முகாம் நடத்துகிறோம் என்றால் அதற்கு நிர்வாகத்தைச் செயல்படுத்துங்கள். அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை அரசியல் நிகழ்ச்சிக்காக விடுமுறை அளித்து பாதிப்பது எந்த முறையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது, என்று கண்டனம் தெரிவித்தார்.

அண்ணாமலையின் இந்த பதிவுக்கு பாஜக ஆதரவாளர்கள் பெரிதும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், திமுக ஆதரவாளர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்து, உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மக்களின் குறைகளை நேரடியாக தீர்க்கும் முயற்சிதான் என்றும், அரசியல் நோக்கம் அல்ல என்றும் வாதிடுகின்றனர். இதனால், சமூக வலைதளங்களில் பாஜக-திமுக ஆதரவாளர்களுக்கிடையில் கடுமையான கருத்து மோதல்கள் உருவாகியுள்ளன.