சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் – தேர்தல் கமிஷனிடம் ஷிண்டே மனு..!

காராஷ்டிராவில் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தலைமையில் இரண்டாக உடைந்திருக்கிறது.

இருவரும் தங்களது அணிதான் உண்மையான சிவசேனா என்று கூறி வருகின்றனர். ஏக்நாத் ஷிண்டே தங்களுக்கு சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று கோரி தேர்தல் கமிஷனில் மனுக்கொடுத்திருக்கிறார். இதையடுத்து இரு அணிகளும் தங்கள் ஆதரவாளர்கள் பட்டியலை தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது.

ஏக்நாத் ஷிண்டே ஏற்கெனவே தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துவிட்டார். தற்போது மும்பையில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா போட்டியிடுகிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா போட்டியிடாமல் அந்தத் தொகுதியை பா.ஜ.க-வுக்கு விட்டுக்கொடுத்துவிட்டது.

இந்த நிலையில் இடைத்தேர்தலை சுட்டிக்காட்டி உடனே எங்களுக்கு சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று கோரி ஏக்நாத் ஷிண்டே தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தேர்தல் கமிஷன் இந்த விவகாரத்தில் பாரபட்சமில்லாமல் முடிவு எடுக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கெனவே உத்தரவிட்டிருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே தற்போது தேர்தல் கமிஷனுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “சிவசேனாவின் சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷன் எந்தவித முடிவும் எடுக்காமல் இருப்பதால் இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி சட்டவிரோதமாக வேட்பாளரை நிறுத்தி வில் அம்பு சின்னத்தை போட்டியிடுவதற்கு பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. எனவே எங்கள் மனுவை உடனடியாக விசாரித்து வில் அம்பு சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும்” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

தேர்தல் கமிஷன் ஷிண்டேவின் கோரிக்கையை ஏற்று அவருக்கு வில் அம்பு சின்னத்தை ஒதுக்கீடு செய்யும்பட்சத்தில் அது உத்தவ் தாக்கரேவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படும். தற்போது பால் தாக்கரேவின் ஒட்டுமொத்த சிவசேனாவுக்கும் ஏக்நாத் ஷிண்டே உரிமை கோரி வருகிறார். அவருக்கு 40 எம்.எல்.ஏ-க்கள், 12 எம்.பி-க்களின் ஆதரவு இருக்கிறது. அதை காரணம் காட்டி சிவசேனாவுக்கு உரிமை கோரி வருகிறார்.