ஷாரிக் ஈஷா யோகா மையத்திற்கு செல்லவில்லை – போலீசார் உறுதி..!

கோவை : மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான ஷாரிக், சம்பவத்திற்கு முன்பாக பல்வேறு ஊர்களில் சுற்றி திரிந்துள்ளான். ஊர் ஊராக சுற்றி திரிந்தபோது தான் தங்கிய இடங்களில் எல்லாம் தனது பெயரை மாற்றி மாற்றி தெரிவித்துள்ளான். மேலும் ஷாரிக் தன்னை யாரும் எளிதில் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதிலும் மிக கவனமாக செயல்பட்டுள்ளார். இதற்காக தனது செல்போன் வாட்ஸ்-அப்பில் காட்சி படமாக(டி.பி.) ஆதியோகி சிவன் படத்தை வைத்துள்ளார். அத்துடன் அதில் தனது பெயரை பிரேம்ராஜ் என்று குறிப்பிட்டுள்ளார்.
தன்னை யாராவது செல்போனில் தொடர்பு கொண்டாலும் தனது மத அடையாளம் இதுதான் என்பதை யாரும் அறியாதபடி தான் ஒரு மாற்று மதத்தை சேர்ந்தவன் என்றே அனைவரும் நம்பும்படி பல ஊர்களிலும் உலா வந்திருக்கிறான். ஆதியோகி படத்தை வாட்ஸ்-அப்பில் வைத்திருந்ததால், ஷாரிக் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றிருக்கலாம் என்று ஒரு தகவல் பரவியது. இதையடுத்து கோவை மாநகர போலீசார் ஷாரிக் ஈஷா யோகா மையம் சென்றாரா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், ஷாரிக் ஈஷா யோகா மையத்திற்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் கோவையில் எந்த பகுதிகளுக்கு சென்றார்? அங்கு யாரை சந்தித்தார்? என விசாரணை நடக்கிறது. இதற்கிடையே கோவை மாநகர போலீசார் ஆன்லைனில் வெடி மருந்துகள் வாங்கியவர்களின் விபரங்களையும் சேகரிக்க தொடங்கி உள்ளனர். இதுதொடர்பாக கோவையில் உள்ள 2 ஆன்லைன் விற்பனை நிறுவன குடோன்களின் பிரநிதிகளிடம் தகவல்களை கேட்டுள்ளனர். மேலும் வெடிமருந்து யாராவது ஆர்டர் செய்தால் உடனடியாக தகவல் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.