தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி… தமிழகம் முழுவதும்.. பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்க தடை- அதிரடி அறிவிப்பு..!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வது நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 3 நாள்களாக பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் கோவை குனியமுத்தூா், ஒப்பணக்கார வீதி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மதுரை, ராமநாதபுரம், திருப்பூர், சேலம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி பிரமுகா் வீடுகள், கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இதனால் இந்த பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு பெட்ரோல் பங்குகளில் கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்க வேண்டாம் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. மேலும், அவ்வாறு கேன், பாட்டில்களில் பெட்ரோல் வாங்க வரும் நபர்களின் விவரங்களை காவல்துறைக்கு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் காவல்துறை அறிவுறுத்தலின் படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வது நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, பெட்ரோல் பங்கில், வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் போடப்படும். வாகனங்களை தவிர உதிரியாக எந்தவொரு கேன்களிலோ, பாட்டில்களிலோ சில்லரையாக பெட்ரோல், டீசல் வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.