செந்தில்பாலாஜி அறுவை சிகிச்சை நடந்து பூரண குணமடைய வேண்டும் – வானதி சீனிவாசன்..!

சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் பெரியகுளத்தின் கரைப்குதியில் பா.ஜ.க சார்பில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். இதில் பா.ஜ.க மாநில பார்வையாளர் சுதாகர் ரெட்டி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

யோகா நிகழ்ச்சிகளுக்கு பின்னர் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடியின் ஆட்சியில் 9 ஆண்டுகளில் யோகா பயிற்சியானது, உலகம் முழுவதும் அதற்கான முக்கியத்துவத்தை பெற்று இருக்கிறது. உலக நாடுகள் யோகாவிற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றது. மேலும் லட்சக்கணக்கான யோகா ஆசிரியர்களுக்கு வாழ்க்கை தரம் உயர்ந்து வருகின்றது. உலகத்திற்கே ஆரோக்கியத்திற்காக கொடையை இந்தியா வழங்கி இருக்கிறது. கோவை மாநகராட்சி நிர்வாகம், பூங்காகளில் யோகா செய்வதற்கான தனி இடம் ஒதுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு யோகா பயிற்சிகளை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும். இது மத சம்மந்தமான விசயம் கிடையாது ஆரோக்கியம் தொடர்பானது. யோகா செய்வதால் மாணவர்கள் மன அழுத்தம், வழிதவறி செல்வது போன்றவற்றில் இருந்து விடுபட முடியும். மாணவர்கள் தினமும் 30 நிமிடம் யோகா செய்வதை கட்டாயமாக்கப்பட வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை நடந்து பூரண குணமாக வேண்டும்” எனத் தெரிவித்தார்.