கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி சரக்கு விற்பனை படுஜோர்… 5 நாட்களில் ரூ324 கோடிக்கு மது விற்பனை..!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரலாறு காணாத அளவுக்கு மதுவிற்பனை உயர்ந்துள்ளது.

கேரளாவில் கடந்த் 5 நாட்களில் மட்டும் ரூ324 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

இந்தியாவிலேயே தமிழகம்தான் குடிகார மாநிலம்; குடிகாரர்களை தமிழ்நாடு அரசே ஊக்குவிக்கிறது; மதுபானங்கள் விற்பனையில்தான் தமிழ்நாடு அரசே இயங்கிக் கொண்டிருக்கிறது; திராவிட கட்சிகள்தான் குடிகார மாநிலமாக தமிழ்நாட்டை சிதைத்துவிட்டது என்றெல்லாம் திராவிட எதிர்ப்பு, வலதுசாரி அரசியல் கட்சிகளின் தினசரி வசவுகள்.

தமிழக குடிமக்களும் இந்த விமர்சனங்களை வசவுகளை நியாயப்படுத்தும் வகையில் விழக்காலங்களில் மதுபானங்களை வாங்கி குவிக்கிறார்கள். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் டாஸ்மாக் நிறுவனமே மதுபான விற்பனைக்கான சேல்ஸ் டார்கெட் பிக்ஸ் செய்வதும் வழக்கமாகிவிட்டது. இந்த டார்க்கெட்டை தாண்டிதான் மதுபான கடைகளில் கல்லாவில் வருவாய் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தமிழகத்துக்கு டாஸ்மாக் போல கேரளாவுக்கு பெவ்கோ நிறுவனம் உள்ளது. கேரளா மதுவிற்பனையை ஒழுங்குபடித்தக் கூடிய நிறுவனம் இது. ஆண்டுதோறும் கேரளாவின் ஓணம் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மதுவிற்பனையை பகிரங்கமாக அறிவித்தும் வருகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகை காலத்தில்தான் மதுவிற்பனை உச்சத்தை தொடும்.

கேரளாவில் 2019-ம் ஆண்டு ஓணம் பண்டிகையின் போது ரூ487 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின. 2020-ல் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் ரூ520 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டன. இந்த ஆண்டும் மதுவிற்பனைக்கு ரூ700 கோடியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது கேரளாவின் டாஸ்மாக்கான பெவ்கோ. நடப்பாண்டு மதுபான விற்பனை இதனை மிஞ்சும் வகையில் இருக்கும் என்றே தெரிகிறது.

ஏனெனில் கேரளாவில் கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ324 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இது தொடர்பாக பெவ்கோ நிர்வாகம் கூறுகையில், கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மதுவிற்பனை சுமார் 30% அதிகரித்துள்ளது. மதுவிற்பனையை அதிகரிப்பதற்காகவே 100 மதுவிற்பனை கூடங்கள் அதிகரிக்கவும் செய்யப்பட்டுள்ளன. ஆகையால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கால மதுபான விற்பனை ரூ700 கோடியை தாண்டும் என்கின்றனர். மதுபான விற்பனையில் தமிழகத்தை தாண்டி சரித்திரம் படைக்காமல் ஓயமாட்டோம் என்ற சபதம் எடுத்திருக்கின்றனர் போல கேரளா குடிமகன்கள்.