ரூ.2,400 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு- அமைச்சர் சேகர் பாபு பேட்டி.!!

சென்னை: சென்னை ஓட்டேரியில் உள்ள விநாயகர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு கூறியது: தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறாத, குடமுழுக்கு நடைபெறாமல் உள்ள கோயில்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். 100க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1000 கோடி அளவிலான கோயில் நிலங்களை மீட்போம் என தெரிவித்து இருந்தோம்.ஆனால் 2,400 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்டுள்ளோம், திருப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்ட 900 கோயில்களில் 500 கோயில்களில் பணிகளை மேற்கொள்ள உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மானிய கோரிக்கையில் அறிவித்த 112 அறிவிப்புகளில் 80% பணிகளுக்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சிதம்பரம் நடராஜன் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர உச்ச நீதிமன்ற வழக்கு தீர்ப்பு குறித்து சட்டவல்லுனர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த ஆய்வின் அறிக்கை பெறப்பட்டவுடன் அது முதல்வரிடம் வழங்கப்பட்டு கோயிலை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் சிதம்பரம் நடராஜன் கோயிலில் நடைபெற்று வரும் பிரச்னைகள் முறைகேடுகள் குறித்து விசாரிக்க துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை அறிக்கை பெற்றவுடன் தவறு யார் செய்து இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.