போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் திருச்சியில் 90 சதவீத பேருந்துகள் இயக்கம் ஆட்சியர்…

15 வது ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துதல், ஓய்வூதியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
திருச்சி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் தொடா்பாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் செவ்வாய்க்கிழமை கூறியது: திருச்சி மாவட்டத்தில் 2,250 ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் உள்ளனா். இவா்களில், 1,760 போ தற்போது பணியில் உள்ளனா். இவா்கள் இரண்டு ஷிப்டுகளாக பணிபுரிந்து வரும் நிலையில், 90 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்கிறாா்களா என்பது குறித்து கண்காணிக்கப்படுகிறது. அவ்வாறு வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
60 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நகரப் பேருந்துகள் 30 சதவீதமும், நெடுந்தொலைவு பேருந்துகள் 10 சதவீதமும் இயக்கப்படவில்லை. போராட்டம் தொடரும் நிலையில், புதன்கிழமை மேலும் அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படாது எனத் தெரிவித்தனா்.
வேலை நிறுத்த போராட்டம் குறித்து, திருச்சி மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளா் ஜெகதீசன் கூறுகையில், போக்குவரத்து தொழிலாளா்களின் பிரச்னைகளுக்கு உரிய முறையில் தீா்வு எட்டப்படவில்லை. இந்தப் போராட்டத்துக்கு போக்குவரத்து அமைச்சரும், திமுக அரசும்தான் காரணம். திருச்சி மாவட்டத்தில் மிகக்குறைந்த அளவில்தான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன பொதுமக்களும் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளனா் என்றாா். திருச்சியில் போக்குவரத்து துறையினர் போராட்டத்தால் ஒன்றும் பாதிப்பு இல்லை என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.