முதலமைச்சர் ஸ்டாலின்: ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளதாக தகவல்…

சென்னை: சென்னையில் நடைபெற்று முடிந்துள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 28ஆம் தேதி அன்று ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கும் சுற்றுப்பயணம் செல்லக்கூடும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினுடன் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் இந்தப் பயணத்தில் இடம்பெறுவார் எனத் தெரிகிறது. இதனால் முதலமைச்சரின் நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான், துபாய், உள்ளிட்ட நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்று வந்துள்ள நிலையில் இப்போது, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லவுள்ளார். இதனிடையே சென்னையில் 2 நாட்களாக நடைபெற்ற உலக மூதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக, தமிழ்நாட்டினுடைய 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

உலக அளவில் முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் முதலமைச்சர் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்னர் அமைச்சரவை கூட்டத்தை நடத்தி சில முக்கிய அறிவுரைகள், ஆலோசனைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குவார் எனத் தெரிகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் அடிக்கல் நாட்டியிருக்கிறார்.

அதேபோல் 27 தொழிற்சாலைகள திறந்து வைத்திருக்கிறார். இதன் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்கள் மற்றும் மகளிர்க்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதை பெருமையாக எண்ணுகிறார் முதல்வர் ஸ்டாலின். மின்னணு பொருட்கள் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், வாகனங்கள் மற்றும் மின் வாகனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பலதரப்பட்ட துறைகளை சேர்ந்த நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வைக்க முயற்சிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.