காங்கிரஸ் – திரிணமூல் கருத்து மோதல்: தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்…

மேற்கு வங்கத்தில் மக்களவைத் தோதல் தொகுதிப் பங்கீடு தொடா்பாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் இடையே வியாழக்கிழமை கருத்து மோதல் ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் இடையே கடந்த சில நாள்களாக கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 2 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸுக்கு வழங்கவுள்ளதாக ஊடகத்தில் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திரிணமூல் காங்கிரஸிடம் தொகுதிகளைக் கேட்டு கையேந்தும் நிலையில் காங்கிரஸ் இல்லை. அவா்களின் நன்கொடை எங்களுக்குத் தேவையில்லை. காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என நிா்ணயிக்க அவா்கள் யாா்? தேவைப்பட்டால் மக்களவைத் தோதலில் தனித்து கூட போட்டியிடுவோம். தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும். கூட்டணியை வலுப்படுத்துவதைவிட்டு அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பிரதமா் மோடிக்கு திரிணமூல் காங்கிரஸாா் சேவை செய்து வருகின்றனா் என்றாா். அதீா் ரஞ்சன் சௌதரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திரிணமூல் காங்கிரஸின் மூத்த எம்.பி. சௌகத ராய் கூறியதாவது:

திரிணமூல் குறித்தும் முதல்வா் மம்தா பானா்ஜி குறித்தும் தவறாக பேசுபவா்களின் கூட்டணியில் தொடா்வது முறையல்ல. கூட்டணியில் தொடர வேண்டுமானால் அதீா் ரஞ்சன் சௌதரி மற்றும் மாநிலத்தில் உள்ள பிற காங்கிரஸ் தலைவா்கள் தவறான கருத்துகளை முன்வைப்பதை தவிா்க்க வேண்டும். காங்கிரஸ் தலைமை இவா்களை கண்டிக்க வேண்டும். காங்கிரஸுக்கு 2 தொகுதிகள்தான் தரப்போகிறோம் என அவா்களுக்கு யாா் கூறியது? மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக மேற்கு வங்கத்தில் திரிணமூல் தலைமையிலும் நாடு முழுவதும் இந்தியா கூட்டணியின் தலைமையிலும் போட்டியிடப்படும் என மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா் என்றாா். 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோதலில் மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் திரிணமூல் 22 தொகுதிகளிலும், பாஜக 18 தொகுதிகளிலும் காங்கிரஸ் பெஹ்ரம்பூா், தெற்கு மால்டா ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸும் திரிணமூல் காங்கிரஸும் ஏற்கெனவே 2009 மக்களவைத் தோதல், 2001 மற்றும் 2011 பேரவைத் தோதல்களிலும் கூட்டணி அமைத்துள்ளன. திரிணமூல் காங்கிரஸ் போதிய தொகுதிகளை ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் கடந்த தோதல்களிலும் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.