100 கிராமங்களில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க ஆய்வு பணி தொடங்கியது..!

சென்னை: தமிழ்நாட்டில் சூரியசக்தி மின்நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு 300 நாட்கள் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.

இதனை அதிகளவு தயாரிக்குமாறு மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதையடுத்து, தமிழக அரசும் சூரியசக்தி மின்னுற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் முதற்கட்டமாக 100 கிராமங்களில் சூரியசக்தி மின்சாரம் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஒரு கிலோ வாட் சூரியசக்தி மின்நிலையத்தில் இருந்து 5 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கிராமத்தில் சராசரியாக 250 வீடுகளுக்கும் குறைவாகவே உள்ளது. எனவே, கிராமங்களில் 250 மற்றும் 500 கிலோ வோல்ட் திறனில் மேற்கூரை சூரியசக்தி மின்நிலையம் அமைக்கப்பட்டு, அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அந்தக் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும்.

இதன்படி, எந்தெந்த கிராமங்களில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 100 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மின்வாரியமும், எரிசக்தி மேம்பாட்டு முகமையும் (டெடா) இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.