அதிமுகவிலிருந்து ஒ.பி.எஸ் நீக்கியது செல்லாது – சசிகலா பேட்டி ..!

சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதியோடு அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஒ.பி.எஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.

முன்னதாக தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த ஒ.பி.எஸ்., இ.பி.எஸ் மற்றும் கே.பி. முனுசாமியை அதிமுகவிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். அதேசமயம், அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு 145 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று புதுக்கோட்டையில் சசிகலாவின் ஆதரவாளர் வீட்டு திருமணத்தில் பங்கேற்ற சசிகலா, ‘அதிமுகவின் இன்றைய நிலையை பார்க்கும்போது, தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. சுயநலவாதிகளை புறந்தள்ளும் நேரமும் வந்துவிட்டது. தொண்டர்களின் எண்ணத்திற்கு மாறாக பணபலம், படைபலத்தை கொண்டு அடித்து பிடிக்கலாம் என்றால் அந்தப் பதவி நிலைக்காது.

சட்டத்திற்கு புறம்பான தலைமையை தொண்டர்கள் நிராகரிக்கும் காலம் வந்துவிட்டது. இருபெரும் தலைவர்களின் ஆசியால் இந்த இயக்கம் மீண்டும் அதே பொலிவோடு மீண்டெழும். நிழுலுக்காக சண்டையிட்டு நிஜத்தை தொலைத்தவர்களின் பின்னால் குதிரைகள் கூட செல்லாது காட்சிகள் மாறினாலும் கொள்கைகளை மட்டும் மனதில் வைத்து செயல்படுங்கள். இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, ‘இன்றைய பொதுக்குழு கூட்டம் செல்லாது காரணம், நானும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது இந்த நிகழ்வு நடக்கக்கூடாது. இ.பி.எஸ். பொதுச்செயலாளரானதே கேள்விக்குறியாக இருக்கும்போது, அவர் ஓ.பி.எஸ்-ஐ நீக்கியது எப்படி செல்லும். ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளரிலிருந்து நீக்கியதற்கு அதிமுக தொண்டர்கள் தக்க பதிலடியை தருவார்கள்.