ராஜ் தாக்கரே பாஜக-வின் உத்தரவை ஏற்று நடக்கிறார்- சரத் பவார் குற்றச்ச்சாட்டு.!!

மும்பையில் கடந்த இரண்டாம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, `மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும், இல்லாவிட்டால் மசூதிக்கு வெளியில் ஒலிபெருக்கியை வைத்துக்கொண்டு அனுமான் பாடல்களைப் பாடுவோம்’ என்று எச்சரித்திருந்தார்.

அவர் எச்சரித்வுடன் மும்பையில், ஆங்காங்கே மசூதிக்கு வெளியில் ஒலிபெருக்கியை வைத்துக்கொண்டு ராஜ் தாக்கரே கட்சியினர் அனுமான் பாடல்களைப் பாடினர்.

அதோடு விடாமல் தாதரிலுள்ள சிவசேனா தலைமையகத்துக்கு வெளியிலும் அனுமான் பாடல்களை ராஜ் தாக்கரே கட்சியினர் பாடினர். இந்நிலையில் மும்பை அருகிலுள்ள தானேயில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராஜ் தாக்கரே, “மசூதிகளில் ஒலிக்கும் ஒலிபெருக்கிகளை உடனே அகற்ற வேண்டும். வரும் மே 3-ம் தேதிக்குள் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றவில்லையெனில் எங்களது கட்சியினர் மசூதிக்கு வெளியில் ஒலிபெருக்கியில் அனுமான் பாடல்களைப் பாடுவார்கள்.

மசூதி ஒலிபெருக்கியில் பாடக் கூடாது. வரும் மே 3-ம் தேதிக்குள் மசூதிகளிலிருக்கும் ஒலிபெருக்ககளை மாநில அரசு அகற்ற வேண்டும். இது ஒரு சமுதாயப் பிரச்னை, மதப் பிரச்னை கிடையாது. மாநில அரசுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். எங்களது முடிவிலிருந்து பின்வாங்க மாட்டோம்” என்று தெரிவித்தார். ராஜ் தாக்கரேவின் ஒலிபெருக்கிக்கு எதிரான பேச்சுக்கு மாநில அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக-வின் பேச்சை ராஜ் தாக்கரே பேசுவதாக சிவசேனா குற்றம் சாட்டியிருந்தது. அதேசமயம் இந்த விவகாரத்தில் ராஜ் தாக்கரேவுக்கு பாஜக ஆதரவு தெரிவித்தது.

இதற்கிடையே ராஜ் தாக்கரே பாஜக-வின் உத்தரவை ஏற்று நடப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “ஒரே சிவில் சட்டம், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது போன்றவை குறித்து ராஜ் தாக்கரே பேசுகிறார் என்றால், அவர் பாஜக-வின் பேச்சைக் கேட்டுத்தான் பேசுகிறார். ஒலிபெருக்கியை அகற்ற ராஜ் தாக்கரே அரசுக்குக் கெடு விதித்திருப்பதை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா சமூக ஒற்றுமையில் பிரச்னையை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. மதக் கொள்கையைப் பரப்பவும் முயற்சி நடக்கிறது. அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க நடக்கும் முயற்சிக்கு மக்கள் பலிகடாவாகிவிடக் கூடாது” என்றார்.

`நீங்கள் நாத்திகர் என்று ராஜ் தாக்கரே சொல்லியிருக்கிறாரே?” என்று கேட்டதற்கு, “நான் கோயிலுக்குச் செல்வேன். ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்வதில்லை. பாஜக-வின் வழிகாட்டுதலில் ராஜ்தாக்கரே பேசுகிறார். பாஜக-வைப் பற்றி ஒரு வார்த்தைகூட ராஜ் தாக்கரே பேசவில்லை. அப்படியென்றால் என்ன அர்த்தம்… அரசியல்வாதி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் குறித்துப் பேசவில்லையென்றால் என்ன அர்த்தம்? பாஜக அவருக்குக் கொடுத்த பணியைச் செய்கிறார். பாஜக-வுக்கும் அவருக்கும் என்ன ஒப்பந்தம் என்று தெரியவில்லை. ஆனால் முழுக்க தேசியவாத காங்கிரஸ் கட்சியைப் பற்றித்தான் பேசியிருக்கிறார். துணை முதல்வர் அஜித் பவாரின் குடும்ப உறுப்பினர்களின் வீடுகளில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தியிருப்பதாக ராஜ் தாக்கரே கூறியிருப்பது குழந்தைத்தனமானது. ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்துக்கு ஒரு முறை அறிக்கைவிடுபவர்களைப் பற்றி மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில் நடக்கவிருக்கும் மாநகராட்சித் தேர்தலில் பாஜக-வும், ராஜ் தாக்கரே கட்சியும் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.