ராகுல்காந்தி பதவி பறிப்பு… டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் வியூகம்- திரிணாமுல் காங். பங்கேற்பு!

டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டங்களை நடத்துவது தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல் முறையாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி தொடர்பான பேச்சுக்காக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி எம்பி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராகுல் வெற்றி பெற்ற கேரளாவின் வயநாடு தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு, புதுவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கறுப்பு உடை அணிந்து இன்று சபையில் பங்கேற்றனர்.

இதனிடையே ராகுல் காந்தி விவகாரத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து விவாதிக்க டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நடத்திய இந்த கூட்டத்தில் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, திமுக டிஆர் பாலு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்திலும் காங்கிரஸ், திமுக தலைவர்கள் கறுப்பு உடையுடன் பங்கேற்றனர். மேலும் முதல் முறையாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஜேடியூ, பிஆர்எஸ், சிபிஎம், ஆர்ஜேடி, என்சிபி, சிபிஐ, ஐயூஎம்எல், மதிமுக, கேரளா காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆர்எஸ்பி, ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, சிவசேனா ஆகியவற்றின் தலைவர்கள் பங்கேற்றனர்.