ராகுல் தொடர்ந்து அவதூறு செய்கிறார்..போலீசில் புகார் செய்ய உள்ளேன்.. கொந்தளித்த சாவர்க்கரின் பேரன்..!

டெல்லி: சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி சாவர்க்கரை அவமதித்து வருகிறது .

ராகுல் காந்தி மீது காவல்துறையில் புகார் செய்ய உள்ளேன் என்று சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி பற்றி பேசியது சர்ச்சையானது.

கர்நாடக மாநிலம் கோலாரில் ராகுல் காந்தி பேசியது தொடட்ர்பாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த கடந்த 23-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது.

இதில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு மறுநாளே ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. ராகுல் காந்தி மீதான அடுத்தடுத்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராகுல் காந்திக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி காங்கிரஸ் கட்சி நேற்று நாடு முழுவதும் அறப்போராட்டத்தை நடத்தியது. அதுபோக நாடாளுமன்றத்திலும் இன்று இந்த விவகாரம் எதிரொலித்தது.

இதற்கிடையே நேற்று முன் தினம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்திய ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசியது தொடர்பாக மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள் என்றும் மன்னிப்பு கேட்க எனது பெயர் சாவர்க்கர் இல்லை என்றும் நான் காந்தி எனவும் ஆவேசமாக பேசியிருந்தார். இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்த பேச்சு அரசியல் ரீதியாக விவாதப்பொருளாகியுள்ளது.

ராகுல் காந்தியின் சாவர்க்கர் குறித்த பேச்சுக்கு சாவர்க்கரின் பேரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சாவர்க்கரின் பேரனான ரஞ்சித் சாவர்க்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ராகுல் காந்தி நான் சாவர்க்கர் இல்லை மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றும் கூறியுள்ளார். சாவர்க்கர் மன்னிப்பு கேட்டார் என்பதற்கான ஆவணங்களை காட்டுமாறு நான் ராகுல் காந்திக்கு சவால் விடுக்கிறேன்.

ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் 2 முறை மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் ராகுல் தொடர்ந்து என் தாத்தாவை(சவார்க்கரை) அவமதித்து பேசிக் கொண்டு இருக்கிறார். சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி சாவர்க்கரை அவமதித்து வருகிறது . ராகுல் காந்தி மீது காவல்துறையில் புகார் செய்ய உள்ளேன்” என்றார்.

முன்னதாக ராகுல் காந்தி சாவர்க்கர் குறித்து பேசியதற்கு மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே கூறுகையில், சாவர்க்கர் எங்களின் கடவுள் போன்றவர் என்றும் அவரை இழிவுபடுத்தக் கூடாது. சாவர்க்கர் குறித்து தொடர்ந்து அவமரியாதை செய்வது கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்தும். அந்தமான் சிறையில் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு இன்னல்களை 14 ஆண்டுகள் சாவர்க்கர் எதிர்கொண்டார்” என்றார்.