விஜய் வீட்டில் ராகுல் – தடபுடல் விருந்து!

இந்தியக் கல்வி முறையில் காணப்படும் குறைபாடுகள், நீட் உள்ளிட்ட தேர்வுத்தாள் கசிவுகள், கல்விக் கட்டண உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களைத் திரட்டி, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘மாணவர்களின் குரல்’ என்ற பெயரில் தொடர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.ராஜஸ்தான் மாநிலம் கோட்டா, மகாராஷ்டிராவின் புனே மற்றும் நாசிக், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து, இன்று சென்னையில் இந்தச் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக இன்று சென்னை வருகை தரும் ராகுல் காந்தி, முதல்வர் விஜய் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசவுள்ளது அரசியல் களம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மதியம் 12.30 மணிக்குச் சென்னை விமான நிலையம் வந்தடையும் ராகுல் காந்தி, அங்கிருந்து நேரடியாக நீலாங்கரையில் உள்ள முதல்-அமைச்சர் விஜய்யின் இல்லத்திற்குச் செல்கிறார். மதியம் 1.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பின் போது, இரு தலைவர்களும் அரசியல் நிலவரங்கள் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, தாஜ் கன்னிமாரா ஹோட்டலுக்குச் செல்லும் ராகுல் காந்தி, அங்குத் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுகிறார்.இதனைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் சென்னை தீவுத்திடலில் நடைபெறும் ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக இணையதளம் மற்றும் கியூ.ஆர். கோடு மூலம் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களிலிருந்து 10,000 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுப் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் என 350 முக்கிய நபர்களுக்கான இருக்கைகளும், பந்தலுக்கு வெளியே நின்று பார்ப்பதற்குக் பிரமாண்ட அகண்ட எல்இடி திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்ட பந்தல் மற்றும் அடிப்படை வசதிகள் தீவிரமாகச் செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளைத் தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், மேலிடப் பொறுப்பாளர் குலாம் அகமது மிர், இணைப் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா, அமைச்சர்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அனைத்து நிகழ்வுகளையும் நிறைவு செய்த பிறகு, ராகுல் காந்தி இன்று இரவு 9.30 மணிக்கு விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.