புதுச்சேரி: புதுச்சேரியில் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் பாஜகவை பலப்படுத்த மாற்றுக்கட்சியினரை அதிகளவில் இழுக்குமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாம்.
இதனால், பாஜகவினரும் தி.மு.க, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சியினருடன் மட்டுமல்லாமல், அ.தி.மு.க, என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளிடமும் கட்சியில் சேர மறைமுகமாக பேசி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
புதுச்சேரியில் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட்டதை தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானது. ஆனால் வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பொறுப்புகளை கவனிக்க அதிகாரிகளை மாநில தேர்தல் ஆணையம் நியமித்து பணிகளை வேகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி பா.ஜ.கவினர் மக்கள் மத்தியில் ஆதரவு பெரும் நோக்கத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் புதுச்சேரி முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். பா.ஜ.கவின் ஒவ்வொரு அணி சார்பாகவும் மோடி அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்கிச் சொல்ல கூட்டம் நடத்தவுள்ளனர். இந்தக் கூட்டங்களில் புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், தேசிய செயற்குழு உறுப்பினரும் அமைச்சருமான நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்தத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.கவோடு கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட பா.ஜ.க முடிவு செய்துள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்யுமாறு மாநில தலைமைக்கு உத்தரவிட்டுள்ளது மேலிடம். இதற்காகவே அமித்ஷா சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தனித்து நிற்கும் அளவுக்கு செல்வாக்கும், பண பலமும் வாய்ந்தவர்கள் கட்சியில் இல்லை என்பதால் அதிர்ச்சியடைந்துள்ளதாம் புதுச்சேரி பாஜக.
இதனால், தமிழ்நாட்டில் அண்ணாமலை மேற்கொண்டுவரும் முயற்சிகளை பின்பற்றுங்கள். மாற்றுக்கட்சியில் இருந்து ஆட்களை இழுத்து கட்சியை பலப்படுத்துங்கள். தமிழ்நாட்டில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று பல இடங்களை பிடித்தது போல புதுச்சேரியிலும் ஜெயித்துக் காட்ட வேண்டும் என தலைமையில் இருந்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்களாம்.
இப்போதே தனித்து நிற்க உத்தரவிட்டுள்ளதற்கு காரணம், இப்போதே பலத்தைக் கூட்ட ஆரம்பித்தால்தான் 2024ல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியை கைப்பற்ற முடியும் என பாஜக கணக்கு போட்டிருப்பது தானாம். புதுச்சேரி தொகுதியை எப்படியாவது தட்டித் தூக்கி விட வேண்டும் அதற்கான வேலைகளை ஆரம்பியுங்கள் என மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்கிறார்கள்.
மேலிட உத்தரவை கண்ணும் கருத்துமாக ஃபாலோ செய்யும் புதுச்சேரி பாஜக, காங்கிரஸ், தி.மு.க மட்டுமல்லாமல் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க, என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் தூண்டில் வீசி வருகிறது. இதனால் அக்கட்சிகளின் மூத்த நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகளைக் காப்பாற்றப் போராடி வருகின்றனர். விரைவில் முக்கிய தலைகள் தாமரைக் கட்சி பக்கம் பாயலாம் எனவும் கூறப்படுகிறது.
Leave a Reply