புதிய வகை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை..!

புதிய வகை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். அதன்படி, டெல்லியில் இன்று மதியம் உயர்நிலை குழுவுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் மோடி.

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா திரிபு மிக வேகமாக பரவி வரும் சூழலில் இந்தியாவில் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில், புதிய வகை கொரோனாவை இந்தியாவில் கட்டுப்படுத்துவது தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ஆலோசிக்க உள்ளார்.

இதனிடையே, சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, உயர்நிலை குழுவுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. உருமாற்றம் பெற்ற பி.எப்-7 வகை கொரோனவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மீண்டும் முகக்கவசம் அணிவது, விமான நிலையங்களில் பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.