உணவுக்கான செலவை தனது சொந்த பணத்தை செலவிடும் பிரதமர் மோடி… அரசு பட்ஜெட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுப்பது இல்லை- ஆர்டிஐயில் தகவல்..!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் உணவுக்காக அரசு பட்ஜெட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட செலவு செய்யப்படவில்லை எனவும், அவர் சொந்த பணத்தை செலவிட்டு வருவதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அரசு அலுவலகங்களின் செயல்பாடு, அரசு திட்டங்கள் தொடர்பான விபரங்களை பொதுமக்கள் ஆர்டிஐ எனும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இதன்மூலம் ஏராளமானவர்கள் அரசு சார்ந்த பல்வேறு விஷயங்களை ஆர்டிஐ மூலம் கேட்டு அறிந்து கொள்கின்றனர். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி குறித்த விபரங்கள் ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்டுள்ளது.

அதாவது பிரதமர் நரேந்திர மோடியின் உணவுக்கான செலவு, பிரதமர் மோடியின் பாதுகாப்பு செலவுகள், வாகன செலவுகள், அவரது சம்பளம் உள்ளிட்ட விபரங்களை ஒருவர் ஆர்டிஐ மூலம் கேட்டுள்ளார். இதற்கு தற்போது பிரதமர் அலுவலக செயலாளர் பினோத் பிஹாரி சிங் பதில் அளித்துள்ளார். அதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் உணவுக்காக அரசு பட்ஜெட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட செலவிடப்படவில்லை. உணவுக்கான செலவை பிரதமர் தனது சொந்த பணத்தில் ஏற்று கொள்கிறார் என கூறப்பட்டுள்ளது. பொதுவாக பிரதமர் உள்பட எம்பிக்களுக்கு பல்வேறு வசதிகள் வழங்கப்படுவதுடன், படிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் உணவுக்கான செலவு தொகையும் உண்டு. இருப்பினும் பிரதமர் நரேந்தி மோடி அதனை பயன்படுத்தவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை(பிஎம் அவாஸ்) மத்திய பொதுப்பணித்துறை பாராமரித்து வருகிறது. வாகனங்கள் மற்றும் பாதுகாப்புகளை எஸ்பிஜி மேற்கொண்டு வருகிறது எனவும் ஆர்டிஐ கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிரதமர் நரேந்திர மோடியின் சம்பளம் தொடர்பான கேள்விக்கு அவரது சம்பளம் என்ன? என்பது பற்றிய இலக்கம் குறிப்பிடப்படவில்லை. மாறாக பிரதமருக்கான சம்பளம் ஏற்கனவே உள்ள விதிகளின்படி வழங்கப்பட்டு வருகிறது என ஆர்டிஐ கேள்விக்கான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நாடாளுமன்றத்தில் இயங்கும் கேன்டீன் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல சீர்திருத்தங்களை செய்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கு முன், பார்லிமென்ட் கேன்டீன்களில் ரூ.17 கோடி மானியமாக செலவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா 2021 ஜனவரி 9ம் தேதி நாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.