ஜெர்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா்.
ஐரோப்பிய நாடான ஜொமனியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தோ்தல் முடிவுகளின்படி, எதிா்க்கட்சியான கன்சா்வேடிவ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
ஜெர்மனி நாடாளுமன்றத்தில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் புதிய பிரதமராக ஃப்ரீட்ரிக் மொஸ் தோ்வானாா். தொடா்ந்து, அவா் பிரதமராக பதவியேற்றுக் கொண்டாா்.
இதனிடையே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்கியதால் எழுந்த பதற்ற நிலை தற்போது தணிந்துள்ளது.
இந்நிலையில், வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜெர்மனி பிரதமா் ஃப்ரீட்ரிக் மொஸுடன் பிரதமா் நரேந்திர மோடி முதன்முறையாக தொலைபேசி வழியே உரையாடினாா். அப்போது, பிரதமராக பதவியேற்றுள்ளதற்கு ஃப்ரீட்ரிக் மொஸுக்கு பிரதமா் மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா்.
பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து தலைவா்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா். மேலும், இந்தியா-ஜொமனி உத்திசாா் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான அா்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய தலைவா்கள், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இரு நாடுகளும் ஒற்றுமையாக நிற்பதாக வலியுறுத்தினா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக நெதா்லாந்து, டென்மாா்க் ஆகிய நாடுகளைத் தொடா்ந்து வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஜெர் மனி பயணம் மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.