இங்கிலாந்து மன்னர் சார்லஸை சந்தித்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு..!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பக்கிங்ஹாம் அரண்மனையில் இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்லஸை சந்தித்தார்.

இங்கிலாந்து நாட்டின் ராணி 2ஆம் எலிசபெத் செப்டம்பர் 8ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் 2ஆம் எலிசபெத்தின் உடல் செப்டம்பர் 13ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது.

லண்டனில் ராணி எலிசபெத்தின் உடலை இங்கிலாந்து மன்னர் சார்லஸும், ராணி கமிலாவும் பெற்றுக் கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் 2ஆம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது. இதனிடையே, ராணி 2ஆம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்துக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

2ஆம் எலிசபெத்தின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தொடர்ந்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அரசுமுறை பயணமாக இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேற்று முன்தினம் இங்கிலாந்து சென்றடைந்தார். அவர் நேற்று வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள 2ஆம் எலிசபெத்தின் உடலுக்கு இந்தியா சார்பில் அஞ்சலி செலுத்தினார். இன்று நடைபெற உள்ள 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியிலும் திரெளபதி முர்மு பங்கேற்க உள்ளார்.

தொடர்ந்து ராணி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, லண்டனில் உள்ள லான்காஸ்டர் மாளிகையில் ராணி 2ஆம் எலிசபெத்துக்கான இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘டியரசுத் தலைவர் திரெளபதி முர்மு லண்டனில் உள்ள லான்காஸ்டர் மாளிகையில் ராணி 2ஆம் எலிசபெத்தின் நினைவாக இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்’ என்று பதிவிட்டுள்ளது.

இந்நிலையில், ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கிற்கு முன்னதாக, நேற்று பக்கிங்ஹாம் அரண்மனையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்லஸை, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சந்தித்தார்.