சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… 50 பேர் உயிரிழப்பு : 20 பேரின் நிலை தெரியவில்லை- 50,000 பேர் பாதுகாப்பாக இடமாற்றம்..

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லூடிங் பகுதியில் நேற்று நேற்று ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாறியுள்ளனர்.

50க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் 20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.

லூடிங் நகரின் அவசரநிலை மேலாண்மைத் துறையிந் துணை இயக்குநர் வாங் பெங் கூறுகையில் ” நிலநடுக்கத்தில் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

திபெத்தியன் கான்ஜி பகுதியில் 29 பேர், யான் நகரில் 17 பேர் பூகம்பத்தால் உயிரிழந்துள்ளனர். கான்ஜி மற்றும் யான் பகுதியிலிருந்து 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு இடமாறி வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

னாவின் மேற்குப்பகுதியில் அமைந்துல்ள சிச்சுவான் மாகாணத்தில் நேற்று பிற்பகல் 12.52 மணிஅளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.8 என ரிக்டர் அளவில் பதிவானது என்று அமெரிக்க புவிவியல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதை சீனாவின் பூகம்ப கண்காணிப்பு மையமும் உறுதிசெய்துள்ளது.

சிச்சுவான் மாகாணத்தில் உள்ள லூடிங் என்ற நகரை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 16கி.மீ ஆழத்தில் இந்த பூகம்பம் நிகழ்ந்தது. சிச்சுவான் தலைநகரம் செங்டுவில் இருந்து 180கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிச்சுவான் மாகாணத்தில் மீட்புப்பணிக்காக 6,500 வீரர்கள், 4 ஹெலிகாப்டர்கள், 2 ஆள்இல்லா விமானங்களை சீன அரசு களத்தில் இறக்கியுள்ளது.

மீட்புப்பணி அதிகாரி ஒருவர் கூறுகையில் ” முதலில் ஏற்பட்ட பூகம்பத்துக்குப்பின், அடுத்தடுத்து குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து அதிர்வுகள் வந்து கொண்டே உள்ளன. கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில்தான் மீட்புப்பணி செய்கிறோம், பல இடங்களில் சாலைகள் பெயர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், கட்டிடங்கள், வர்த்தக கட்டிடங்கள் இடிந்துள்ளன, பல இடங்களில் சாலைகள் பிளந்துள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.

மாக்ஸி நகரில் நிலநடுக்கத்துக்குப்பின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, அவசரநிலை மின்சாரம் வழங்கும் கருவி மூலம்தான் மின்சாரம் வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

சீனாவின் அவசரநிலை மற்றும் மேலாண்மை அமைச்சகம் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், மீட்புப்பணிகளை விரைவாகச் செய்யவும், 72.50 லட்சம் டாலர்களை ஒதுக்கியுள்ளது. இது தவிர சிச்சுவான் மாகாணமும் 72 லட்சம் டாலர்களை ஒதுக்கியுள்ளது. 3ஆயிரம் டென்ட் குடிசைகள், 10ஆயிரம் படுக்கைகள், உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்றவை லூடிங் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

திபெத் மலைப்பகுதி எப்போதுமே நிலநடுக்கத்துக்கு அதிக வாய்ப்புள்ள பகுதி. திபெத்தின் எல்லை ஓரத்தில் சிச்சுவான் மாகாணம் அமைந்துள்ளது. திபெத்திய பீடபூமியில் பூமிக்கு அடியில் டெக்டானிஸ் யூரேசியன் மற்றும் இந்திய பிளேட்டுகள் சந்திக்கும்போது, உரசும்போது ஏற்படும் அதிர்வுகள், பூகம்பங்கள் சிச்சுவானையும் பாதிக்கும்.