பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கர்நாடக மாநில செயலாளரை கோவை ரயில் நிலையத்தில் மடக்கி பிடித்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்..!!

கோவை, செப்.22-
கர்நாடக மாநில பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா செயலாளர் சாதிக் முகமது தனது உதவியாளருடன் இன்று காலை ரெயில் மூலமாக கோவை வந்தார். அவரையும்,அவரது உதவியாளரையும் கோவை ரெயில் நிலையத்தில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்தனர்.
பின்னர் ரெயில் நிலையம் முன்பு உள்ள போலீஸ் அருங்காட்சியகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் ஏ.எஸ். இஸ்மாயில் மற்றும் சாதிக் முகமது ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு 4 என்.ஐ.ஏ. அதிகாரிகள் விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து சென்றனர்.
சாதிக் முகமதுவுடன் வந்த உதவியாளர் கோவை விமான நிலையத்தில் விடுவிக்கப்பட்டார். டெல்லியில் வைத்து விசாரணைக்கு பின்னர் இருவரும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை நகரின் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்கள் நடந்தது.
ஒப்பணக்கார வீதி, ஆத்துப்பாலம் , சாய்பாபா காலனி, குனியமுத்தூர், குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 126 பேரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். மறியல் போராட்டம் காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.