பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, முழு கரும்பு, வேட்டி சேலை, சர்க்கரை, மற்றும் 3000 ரூபாய் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அதனை தொடர்ந்து, கூட்டுறவு துறை சார்பில் அனைத்து நியாய விலை கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இன்று முதல்வர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்த உடன், அனைத்து மாவட்டங்களிலும் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கோவை வடகோவை பகுதியில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு அங்காடி நியாய விலை கடையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாநகராட்சி ஆணையர், மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர்.
கோவையில் 11 லட்சத்து 22 ஆயிரத்து 290 குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 1540 நியாய விலை கடைகளில், 336.68 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.







