கலங்கரை விளக்கம் கட்டிடம் ‘ட்ரோன் கேமரா’ மூலம் படம் பிடித்த ஆஸ்திரேலியா பொறியாளர் உட்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை.!!

சென்னை: சென்னையின் அடையாளகங்களில் ஒன்றான மெரினா கடற்கடையில் இருக்கும் கலங்கரை விளக்கம் காட்சி முனையாகவும் திகழ்கிறது .கலங்கரை விளக்கம் இருக்கும் பகுதியில் ட்ரான் கேமரா பறக்க தடை விதிக்கபட்டுள்ளது.மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் கட்டிடத்தை ‘ட்ரோன் கேமரா’ மூலம் படம் பிடித்ததாக ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த பொறியாளர் உட்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தின் பொறுப்பு அலுவலராக குமார் ராஜா(44) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு பணியில் இருந்த போது, 7 மணி அளவில் கலங்கரை விளக்கம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ட்ரோன் கேமரா ஒன்று சுற்றி வந்தது. இதை பார்த்த குமார் ராஜா மேலே பறந்த ட்ரோன் கேமராவை கண்காணித்தார். அப்போது திடீரென ட்ரோன் கேமரா கலங்கரை விளக்கம் வளாகத்தில் விழுந்தது.

இதை சற்றும் எதிர்பார்க்காத குமார் ராஜா, ட்ரோன் கேமராவை மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும், தடை செய்யப்பட்ட பகுதியில் குறிப்பாக கலங்கரை விளக்கம் கட்டிடத்தை சுற்றி பறந்து படம் பிடித்த நபர்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளித்தார். அந்த புகாரின் படி மெரினா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை நடத்தினர். அப்போது, திருவான்மியூர் ஆர்.கே.நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்த பொறியாளர் புவனேஷ்(30) மற்றும் அவரது சகோதரர் சுதர்சன் ஆகியோர் போலீசாரிடம் இந்த ட்ரோன் கேமரா தங்களுடையது என்றும், மெரினா அழகை படம் பிடிக்க இயக்கியதாக கூறினர். மேலும், ட்ரோன் கேமரா மேலே பறந்த போது திடீரென சிக்னல் கிடைக்காததால் கீழே விழுந்துவிட்டதாக கூறினர்.

ஆனால் போலீசார் ட்ரோன் கேமரா பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த தடையை மீறி ட்ரோன் கேமரா மூலம் படம் பிடித்தது குற்றம் என்று கூறினர். அதற்கு பொறியாளர் புவனேஷ் ‘நான் ஆஸ்திரேலியாவில் எலக்ட்ரானிக் இன்ஜினியராக வேலை செய்து வருகிறேன். ட்ரோன் கேமரா பறக்க தடை விதித்து இருப்பது எனக்கு தெரியாது’ என்று கூறி மன்னிப்பு கேட்டார். அவரது சகோதரர் சுதர்சன், ராஜீவ் காந்தி சாலையில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். ஆனால் போலீசார் ட்ரோன் கேமரா ஆய்வு செய்ய வேண்டும். எனவே ட்ரோன் கேமரா தரமுடியாது என்று கூறி இருவரையும் கடுமையாக எச்சரித்தும், அவர்களிடம் கடிதம் எழுதி வாங்கி கொண்டு எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வரவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர். கடந்த மாதம் கலங்கரை விளக்கம் கட்டிடம் குண்டு வைத்து தகர்க்கப்படும் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மர்ம நபர் ஒருவர் புகைப்படத்துடன் பதிவு செய்து இருந்தார். இதனால் கலங்கரை விளக்கம் பகுதியில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கலங்கரை விளக்கம் கட்டிடத்தை சுற்றி ட்ரோன் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்ட சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.