சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானுக்கு நியாயமான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், தெஹ்ரீக் இ-இன்சாப் (பிடிஐ) கட்சியைத் தொடங்கி, 2018 பொதுத் தேர்தலில் வென்று, பாகிஸ்தானின் 22-வது பிரதமராகப் பதவியேற்றார். கூட்டணிக் கட்சிகள் விலகியதால், 2022 ஏப்ரல் மாதம் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் அவர் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் என 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சில வழக்குகளில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த சூழலில் இம்ரான் கானின் வலது கண்ணில் சிஆர்விஓ என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வலது கண்ணில் 85 சதவீத பார்வை இழப்பு அவருக்கு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சிறை அதிகாரிகள் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த சூழலில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான்களான கிளைவ் லாயிட், சுனில் கவாஸ்கர், கபில் தேவ், ஆலன் பார்டர், கிரேக் சேப்பல், மைக்கேல் ஆதர்டன், மைக்கேல் பிரயர்லி, இயன் சேப்பல், பெலிண்டா கிளார்க், டேவிட் கோவர், கிம் ஹியூக்ஸ், நாசர் ஹுசைன், ஸ்டீவ் வாஹ், ஜான் ரைட் உள்ளிட்ட 14 பேர் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சிறையில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் கானின் ஆரோக்கிய நலன் குறித்து அறிந்து பல்வேறு சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்களான நாங்கள் மிகுந்த கவலை அடைந்தோம். கிரிக்கெட் விளையாட்டுக்காக அவரது அர்ப்பணிப்பு போற்றத்தக்கது. பாகிஸ்தான் அணியை 1992 உலகக் கோப்பையில் கேப்டனாக வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்ல செய்தவர். எல்லைகளை கடந்து அவரது கிரிக்கெட் திறன் பலரையும் ஈர்த்துள்ளது. எங்களில் பலர் அவருக்கு எதிராக விளையாடி உள்ளோம், அவருடன் விளையாடி உள்ளோம், அல்லது அவரை பார்த்து வளர்ந்து உள்ளோம். கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன், ஆல்ரவுண்டராக இம்ரான் கான் அறியப்படுகிறார்.கிரிக்கெட்டை கடந்து பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் சேவையாற்றி உள்ளார். சவாலான காலத்தில் தனது தேசத்தை அவர் வழிநடத்தினார். அரசியலை கடந்து ஜனநாயக முறைப்படி பிரதமர் பொறுப்புக்கு தேர்வானவர். இந்த சூழலில் அண்மையில் வெளியான அவரது ஆரோக்கிய நலன் குறித்த தகவல் கவலை அளிக்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் சிறையில் உள்ளார்.







