கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் பீட்சா கடை ஒன்றில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார். இந்தநிலையில் அதே கடையில் மேலாளராக வேலை பார்க்கும் ஊட்டியை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க நபர் இளம்பெண்ணை தனது ஆசைக்கு இணங்கும்படி அழைத்து வந்தார். நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரித்து போகவே இளம்பெண் இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். உடனடியாக இளம்பெண்ணின் கணவர் தனது நண்பர்கள் 2 பேருடன் அந்த கடைக்கு சென்றார். அங்கு இருந்த மேலாளரிடம் இளம்பெண்ணை ஆசைக்கு இணங்கும்படி அழைத்தது குறித்து கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மேலாளர் இளம்பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசினார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தன்னை மேலாளர் ஆசைக்கு இணங்கும்படி அழைத்தது குறித்தது கேட்க சென்ற கணவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதால் மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் வைத்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் கணவர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply