தமிழக பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- ஒருவர் கைது..!

சென்னை:தி.நகரில் உள்ள பாஜக அலுவலகம் மீது 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தொடர்பாக வினோத் என்பவர் கைது.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலரால் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அக்கட்சி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து,இந்த சம்பவம் குறித்து மாம்பழம் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.எனினும்,இந்த சம்பவத்தில்,எந்த உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக தலைமை அலுவலகத்தில் ஏற்கனவே பலத்த போலீஸ் பாதுகாப்பு உள்ளது.மேலும்,பாஜக தலைமை அலுவலகத்திற்கு செல்லக்கூடிய தெருக்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த சூழலில், தி.நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள நுழைவு வாயிலில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து பெட்ரோல் குண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில்,பாஜக அலுவலகம் மீது 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சிசிடிவி காட்சிகளில் பதிவான இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து சென்னை நந்தனத்தைச் சேர்ந்த வினோத் என்பவரை போலீசார் கைது செய்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அப்போது,நீட் தேர்வை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலே பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வினோத் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில்,வினோத் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.