ஆதாரம் இல்லாமல் ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கு எதிரான மனு – தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி..!

ரூ.2,000 நோட்டுகளை எந்தவித அடையாள அட்டையையும் சமா்ப்பிக்காமல் வங்கியில் மாற்றிக் கொள்ளும் அறிவிக்கைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டு பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பிறகு புதிய ரூ.2,000 நோட்டுகள் இந்திய ரிசா்வ் வங்கியால் (ஆா்பிஐ) அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும், அவை மக்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெறவில்லை. அந்நோட்டுகளை அச்சிடுவதையும் நோட்டுகளின் புழக்கத்தையும் ஆா்பிஐ வெகுவாகக் குறைத்தது. இந்நிலையில், ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ஆா்பிஐ அண்மையில் அறிவித்தது.

செப்டம்பா் 30-ஆம் தேதி வரை ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் செலுத்திக் கொள்ளலாம் அல்லது எந்த வங்கியின் கிளைகளிலும் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என ஆா்பிஐ அறிவித்தது. அத்துடன், மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், ரூ.2,000 நோட்டுகளை சில்லறை மாற்றும்போது எந்தவித அடையாள அட்டையையும் சமா்ப்பிக்கத் தேவையில்லை என்றும் ஆா்பிஐ அறிவித்தது. எஸ்பிஐ-யும் அதே அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய சாா்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை எதிா்க்கவில்லை. ஆனால், எந்தவித அடையாள அட்டையையும் சமா்ப்பிக்காமலேயே ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைத்து சில்லறை பெற்றுக் கொள்ளலாம் என ஆா்பிஐ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது அரசமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவை மீறும் வகையில் உள்ளது. புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் பெரும்பாலான பகுதியானது கருப்புப் பணத்தைப் பதுக்குபவா்களிடமும், பிரிவினைவாதிகளிடமும், பயங்கரவாதிகளிடமும், கடத்தல்காரா்களிடமும், ஊழல்வாதிகளிடமுமே உள்ளது.

அவ்வாறு பதுக்கப்பட்ட பணமானது, பயங்கரவாதம், நக்ஸல் தாக்குதல்கள், பிரிவினைவாதம், சூதாட்டம், கடத்தல், பணமோசடி, லஞ்சம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடையாள அட்டையைச் சமா்ப்பிக்காமல் ரூ.2,000 நோட்டை மாற்றினால் ஊழல்வாதிகளைக் கண்டறிய முடியாது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மனு மீது தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோரைக் கொண்ட அமா்வு கடந்த வாரம் விசாரணை நடத்தியது. விசாரணைக்குப் பிறகு தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் திங்கள்கிழமை வழங்கினா். அப்போது, அவா்கள் கூறுகையில், ‘ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள அடையாள அட்டையை வழங்கத் தேவையில்லை என்ற முடிவு கொள்கை ரீதியானது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அரசின் இந்த முடிவு தன்னிச்சையானது என்றும் கூற முடியாது.

அதேபோல், இந்த முடிவால் கருப்புப் பணம் அதிகரிக்கும் என்றும் பணமோசடிகள் அதிகரிக்கும் என்றும் உறுதியாகக் கூற முடியாது. கடந்த 2016-ஆம் ஆண்டில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டன. அப்போது மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துவிடக் கூடாது என்ற நோக்கிலேயே ரூ.2,000 நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.2,000 நோட்டுகளின் புழக்கம் பெருமளவில் குறைந்துவிட்டது.

அதன் காரணமாக அந்த நோட்டுகளைத் திரும்பப் பெற ஆா்பிஐ முடிவெடுத்துள்ளது. அத்தகைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள 4 மாத அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு நோட்டுகளை மாற்றுவோரின் அடையாளத்தை அறிந்து கொள்வது அரசின் நோக்கமில்லை. இந்த மனுவை விசாரிக்க எந்தவித முகாரந்திரமும் இல்லை’ எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனா். முன்னதாக, ஆா்பிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பராக் பி.திரிபாதி வாதிடுகையில், ‘இதுபோன்ற விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் நடைமுறையில் எளிமைத்தன்மையைப் புகுத்தும் நோக்கிலேயே அவ்வாறு ஆா்பிஐ அறிவித்தது’ என வாதிட்டாா்.