பேரறிவாளன் விடுதலை கொண்டாடக்கூடியது அல்ல… 7 பேரும் குற்றவாளிகள்தான்… அண்ணாமலை பேச்சு.!!

சென்னை: பேரறிவாளன் விடுதலை கொண்டாடப்படக்கூடியது இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலைசெய்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் 142-வது பிரிவைபயன்படுத்தி, தனிச் சிறப்பு உடையதாக கருதி இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதனால், இந்த தீர்ப்பை பாஜக ஏற்றுக்கொள்கிறது. ஆனால் இவர்கள் குற்றவாளிகள் என்பதை எப்போதும் மறக்க கூடாது. ஒரு முன்னாள் பிரதமரை, தமிழ் மண்ணில் கொன்றிருக்கிறார்கள்.

ஆனால், பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்பைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நடந்துகொண்ட விதங்களை பார்த்தால், ஏதோ நிரபராதியை விடுதலை செய்ததுபோன்று கொண்டாடுகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நடந்துகொண்ட விதத்தை பார்க்கும்போது அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு, நேர்மையாக சட்டத்தை நிலைநாட்டக்கூடிய முதல்வராக இருப்பாரா என்ற சந்தேகம் எழுகிறது.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

ஒரு மணி நேரம் வாயை கட்டிக்கொண்டு கோபத்தை வெளிப்படுத்துகிறோம். அடுத்த நாள் காலையில் திமுக வழங்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக போய் நிற்போம்’ என்று காங்கிரஸ் கூறுவது தமிழக மக்களை முட்டாள் ஆக்குவதற்கு சமம்.

பாஜகவை பொருத்தவரை 7 பேரும் குற்றவாளிகள்தான். உச்சநீதிமன்றம் ஆராய்ந்து சில காரணங்களால் விடுதலை செய்திருக்கிறதே தவிர, அவர்கள் கொண்டாடப்படக்கூடியவர்கள் அல்ல.

வரலாற்றில் திமுக தவறான முன்னுதாரணத்தை எடுத்து வைத்திருக்கிறது. அவர்களை கொண்டாடி வருங்கால தலைமுறையினருக்கு தவறான முன்னுதாரணமாகிவிடக் கூடாது.

7 பேர் விடுதலைக்கு அதிமுகஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றினாலும், விடுதலையான பிறகு அவரை அதிமுகவினர் யாரும் ஆரத்தழுவி, கட்டியணைத்து, முத்தமிட்டு கொண்டாடவில்லை.

இந்த தீர்ப்பின்படி, சிறையில் பேரறிவாளனின் நடத்தை, 2 முறை பரோலில் வந்த பிறகு அவரது நடத்தை, எந்த புகாருக்கும் இடமின்றி இருந்தது போன்ற காரணங்களால்தான் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனவே, இத்தீர்ப்பு மற்ற 6 பேருக்கு பொருந்தாது. இவ்வாறு அவர் கூறினார்.