பாம்பன் புதிய ரயில்வே பாலம் சர்ச்சை – 5 பேர் கொண்ட குழு அமைப்பு..!

புதுடில்லி: பாம்பனில் கட்டப்பட்டு உள்ள புதிய ரயில்வே பாலம் சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவை அமைக்கப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் அமைத்த புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணியும், இதன் நடுவில் துாக்கு பாலம் பொருத்தி பல கட்டமாக திறந்து மூடும் சோதனையும், பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்தது.
இறுதியாக கடந்த 13ம் தேதி பாம்பன் பாலத்தில் உள்ள துாண்கள், இரும்பு கர்டர்களை ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி 14ம் தேதி துாக்கு பாலத்தை திறந்து மூடும் செயல்முறை, ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். அதன் பின் மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 7 ஆய்வு ரயில் பெட்டிகளுடன் புறப்பட்ட ரயில் இன்ஜின் 80 முதல் 90 கி.மீ., வேகத்தில் பாம்பன் பாலத்தை கடந்து ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் சென்றடைந்தது. பின் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட அதே ரயிலில் சவுத்ரி பயணித்து அதிவேகமாக செல்லும் போது பாலத்தில் ஏற்படும் அதிர்வுகள், பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கினார். புகார் இந்நிலையில், ரயில்வே வாரியத்திற்கு சவுத்ரி அளித்த அறிக்கையில்*பாலத்தில் அரிப்பு, துருப்பிடித்தல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை இல்லை.

தற்போதே அரிப்பு உள்ளது. *தண்டவாளத்தில் அதிக ஒலி, புதிய பாலத்தில் உள்ள குறைகளை மறு ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும். பாம்பன் புதிய பாலத்தில் 50 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கலாம்.

கடல் பகுதியில் 58 கி.மீ. வேகத்தில் காற்று வீசினால் ரயிலை இயக்கக் கூடாது என கூறப்பட்டு இருந்ததாக தகவல் வெளியானது. விளக்கம் பாலம் திறப்பதற்கு முன்னர், இவ்வாறு குறைபாடுகள் உள்ளதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இது குறித்து கேள்வி எழுப்ப துவங்கினர்.இதனையடுத்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாலத்தின் வடிவமைப்பை சர்வதேச நிறுவனமான TYPSA வடிவமைத்தது.

இந்த பாலத்தின் வடிவமைப்பை சென்னை ஐ.ஐ.டி.,யும், கூடுதலாக மும்பை ஐ.ஐ.டி.,யும் மறு ஆய்வு செய்தது. இரண்டு முறை ஆய்வு செய்த பிறகே தெற்கு ரயில்வே இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாம்பன் பால கட்டமைப்பை, அதிநவீன அல்ட்ரா சோனிக் முறையில் 100 சதவீதம் பரிசோதனை செய்யப்பட்டது. திருச்சியில் உள்ள வெல்டிங் ஆராய்ச்சி நிறுவனமும், தெற்கு ரயில்வேயும் பரிசோதனை செய்தது.உலகளவில் தீவிர அரிப்பு ஏற்படுத்தும் பகுதிகளில் பயன்படுத்தப்படும் சிறப்பு பெயிண்ட் திட்டமான பாலிசிலோக்சேன் பெயிண்ட்டை பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் ஆயுட்காலம் 35 ஆண்டுகள் ஆகும். அதிநவீன வடிவமைப்பு மற்றும் சிறந்த கட்டுமான நடைமுறைகளுடன் பாலம் கட்டப்பட்டு உள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது. இதற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்பதல் வழங்கி உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.குழு இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் பிரச்னைகள் தொடர்பாக ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உள்ளோம்.

இக்குழுவில் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு, தெற்கு ரயில்வேயை சேர்ந்தவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் இடம்பெறுவார். இக்குழு பாலத்தின் வடிவமைப்பு குறித்து ஒன்றரை மாதங்களில் 5 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவை அமைத்து உள்ளோம். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தெரிவித்த பிரச்னைகள் குறித்து இக்குழு ஆய்வு செய்யும். இக்குழுவானது, பாலத்தின் வடிவமைப்பு குறித்து, இக்குழு ஒன்றரை மாதத்தில் தீவிரமாக ஆய்வு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.