பழநி கோயில் உண்டியல் வருமானம் ஏழு கோடியைத் தாண்டியது..!

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி திருக்கோயில் உண்டியல் வசூல் ஏழு கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி மலை முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. தமிழ்நாடு மட்டுமல்லாத கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் இங்கு பக்தர்கள் வந்து இங்கு வழிபடுவது வழக்கம். அதிலும் கடந்த மாதம் 27-ம் தேதி பழநி மலைக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த மாதம் முதல் வாரத்தில் தைப்பூச விழா நடைபெற்றது. இந்த இரண்டுக்கும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர்.

அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தி சென்றதால் கோயில் உண்டியல் நிரம்பியது. அதனையடுத்து உண்டியல் என்னும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது.

பழநி கோயில் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் பிரகாஷ், திண்டுக்கல் மண்டல இந்து அறநிலையத்துறை உதவி ஆணையா் சுரேஷ், அறங்காவலா் ராஜசேகரன் உள்ளிட்டோா் கண்காணிப்பில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. உண்டியல் எண்ணிக்கையில் திருக்கோயில் கல்லூரிப் பணியாளா்கள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

இதில் மொத்தம் 7 கோடியே 17 லட்சத்து 42,126 ரூபாய் பணம் இருந்தது. அதேபோல 1248 கிலோ தங்கம், 48 ஆயிரத்து 277 கிலோ வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். அது தவிர 2,529 வெளிநாட்டு கரன்சிகள் பக்தர்களால் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது.

இதுதவிர, பித்தளையிலான வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளை போன்றவைகளும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.