பாகிஸ்தானுக்கு தீவிரவாத வரலாறு இருக்கு… ஒப்புக்கொண்ட பாக். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர்..!

பாகிஸ்தானுக்கு தீவிரவாத வரலாறு இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும், 26 சுற்றுலா பயணிகளின் உயிரை குடித்த பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பின்னதாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு, பாகிஸ்தானை பின்புலமாக கொண்ட ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தின் துணை அமைப்பு ஒன்றே காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி ஒருவர் பாகிஸ்தான் பாதுகாப்பு படையின் முன்னாள் கமாண்டோ என்றும் கூறப்படுகிறது. இதனால், பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளுக்கு மறைமுக உதவி செய்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அதே நேரத்தில் பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கும் தங்கள் நாட்டுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இது தொடர்பாக பொதுவான விசாரணைக்கும் தயார் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. இதனால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. தற்போது பஹல்காம் சம்பவத்தை விசாரித்து வரும் என்.ஐ.ஏ, இத்தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை திரட்டி வருகிறது.

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, பாகிஸ்தான் தீவிரவாத செயல்களை ஆதரித்து வந்தது என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

அண்மையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப்பும் பாகிஸ்தான் தீவிரவாத செயல்களை கடந்த காலங்களில் ஆதரித்தது என்பதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து பிலாவல் பூட்டோவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்..

பிலாவல் பூட்டோ கூறுகையில், ‘பாகிஸ்தானின் தீவிரவாத வரலாறு மறுக்க முடியாதது என்றாலும், அது கடந்து சென்ற ஒரு அத்தியாயம். பாதுகாப்பு அமைச்சர் கூறியதைப் பொறுத்தவரை, பாகிஸ்தானுக்கு ஒரு கடந்த காலம் இருந்தது ஒரு ரகசியம் என்று நான் நினைக்கவில்லை. இதன் விளைவாக, நாம் பாதிக்கப்பட்டுள்ளோம், பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தின் அலை அலையாக நாம் கடந்து வந்துள்ளோம். ஆனால் நாம் அனுபவித்தவற்றின் விளைவாக, நாம் பாடங்களையும் கற்றுக்கொண்டோம். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம்.

அது வரலாறு, இன்று நாம் அதில் பங்கேற்கவில்லை. அது நமது வரலாற்றின் ஒரு துரதிர்ஷ்டவசமான பகுதி என்பது உண்மைதான்.’ என்று பூட்டோ தெரிவித்தார்.