ஓன்னு கூடிய முன்னாள்கள்… நம்ம போக வேண்டாம்..அவங்களே நம்மள தேடி வருவாங்க… மகிழ்ச்சியில் ஓபிஎஸ்! எதிர்பார்த்த தேனி தரப்பு ர.ர.க்கள்… யோசிக்கும் சேலம்..!

சென்னை : அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பக்கபலமாக இருந்து மிகத் தீவிரமாக செயல்பட்ட பல மூத்த முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகளுக்கு, இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால், அவர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்களுக்கு ஓபிஎஸ் தரப்பு தூது அனுப்பாமல், அவர்களே நம்மைத் தேடி வருவார்கள் என்ற ரீதியில் காய்களை நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி கட்சி பொது குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கட்சி ஒருங்கிணைப்பாளரும் பொருளாளராக இருந்தவருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

தன்னை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக்கிய நிர்வாகிகளை தான் நீக்குவதாக ஓ பன்னீர்செல்வம் அடுத்தடுத்து இரு அறிக்கைகள் வெளியிட்டார். இதேபோல எடப்பாடி தரப்பும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்த பட்டியலை தயாரித்து அவர்களை அடுத்தடுத்து கட்சியிலிருந்து நீக்கியது. தற்போது இந்த விவகாரம் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ள நிலையில் உண்மையில் எடப்பாடி பழனிச்சாமி கையே அதிமுகவில் தற்போது ஓங்கி இருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வரும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொருளாளராக முன்னாள் அமைச்சரான திண்டுக்கல், சீனிவாசன், துணைப் பொதுச்செயலாளராக நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி.வேலுமணி, எதிர்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளராக அக்ரி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல அதிமுகவின் புதிய அமைப்பு செயலாளர்களாகவும் பல முன்னாள் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு, சிவி சண்முகம், தனபால், கேபி அன்பழகன், காமராஜ், கடம்பூர் ராஜு, கே டி ராஜேந்திர பாலாஜி, ராஜன்செல்லப்பா மற்றும் பாலகங்கா ஆகியோர் இருந்தனர். அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், பொன்னையன், செங்கோட்டையன், தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு பதவிகள் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தான் அதிமுகவின் ஓபிஎஸ் என்ற ஒருவரை சமாளிக்க அத்தனை பதவிகளையும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே வழங்குவதா என சில முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் தங்களுக்குள்ளாகவே சிண்டிகேட் அமைத்து பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பை சிறிது சிறிதாக வளைத்து வரும் ஓபிஎஸ் தரப்புக்கு இந்த தகவல் சென்று சேர்ந்துள்ளதால் அவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே மறைமுகமாக மட்டுமே அவர்களை அணுக வேண்டும் எனவும், அவர்களாகவே நம் பக்கம் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக சொல்கின்றனர் தேனி தரப்பு ர.ர.க்கள்! இந்த தகவல் சேலத்துப் பக்கம் அடித்துள்ள நிலையில் , அடுத்து என்ன என்பது குறித்தும் யோசித்து வருகின்றனர்.