சட்டசபைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் 8-ல் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் மூர்த்தி திமுகவின் தோல்வி குறித்துத் தனது வேதனையையும் புலம்பலையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அதிமுகவை மட்டுமே தங்களின் எதிரியாக நினைத்துத் தேர்தலைச் சந்தித்ததால், ஆன்லைன் அரசியல் செய்த தவெகவைச் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், திமுக ஆட்சியில் நலத்திட்டங்களை நிறைவாகச் செய்தபோதிலும், இளைஞர்களைக் கவரும் வகையில் சோசியல் மீடியாவில் அரசியல் செய்வதில் கோட்டைவிட்டுவிட்டதாகக் கூறியுள்ள அவர், திமுகவினரின் சொந்தக் குடும்ப உறுப்பினர்களே தங்களின் மொபைல் போன்களில் விஜய் படத்தை ‘டிபி’-யாக வைத்திருப்பதைப் பார்க்க மிகவும் வேதனையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தோல்விக்குப் பின் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் சென்றதால், மதுரையில் திமுகவிற்கு இப்போது ஒரேயொரு எம்எல்ஏ மட்டுமே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரை திமுகவை அடிப்படையிலிருந்து மீண்டும் கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மூர்த்தி, இந்த முறை திமுகவினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சி உண்மையையும் உடைத்துள்ளார்.
திமுகவில் இருக்கும் இளைஞர்கள் சோசியல் மீடியாவில் தீவிரமாகச் செயல்பட்டு விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும், தோல்வி குறித்து விசாரிக்கும் குழுவிடம் குறைகளை வெளிப்படையாகக் கூறி திமுக இப்போது சுயபரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








