இன்றுடன் காலாவதியாகிறது ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான அவசர சட்டம்- ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருப்பு..!

சென்னை: ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதற்கிடையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் காலாவதி ஆகியுள்ளது. இதனால், நிலுவையில் உள்ள மசோதாவிற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நவீன காலத்தில் இணைய கேம்கள் பெருகி வரும் சூழலில், ஆன்லைன் முறையில் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகள் பிரபலம் அடைந்தன.

இணையதளத்தில் பலரும் இது போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளையாடி ஆயிரம், லட்சக்கணக்கில் பணத்தை இழந்தனர்.

பணத்தை பறிகொடுத்த ஏமாற்றத்தில் சிலர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது. இதனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால், மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தலை தூக்கத்தொடங்கியது.

தற்கொலை சம்பவங்களும் தொடர்ந்ததால், தமிழக அரசு, ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பித்தது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஒப்புதல் அளித்தார். அவசர சட்டத்திற்கு மாற்றாக தமிழக சட்டசபையில் சட்டம் இயற்றப்பட்டது. இதை ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 28 ஆம் தேதி தமிழக அரசு அனுப்பி வைத்தது. ஏற்கனவே அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதால், இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, ஆன்லைன் சூதாட்ட மசோதா விவகாரத்தில் சில சந்தேங்கள் எழுப்பிய ஆளுநர் அதற்கு தமிழக அரசிடம் விளக்கம் கேட்டார். தமிழக அரசும் உடனடியாக விளக்கங்களை அனுப்பியது. ஆனாலும் ஆளுநர் இந்த சட்ட மசோதாவிற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கிடையே, ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக கடந்த மாதம் 1 ஆம் தேதி தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் காலாவதியாகியுள்ளது.

சட்டசபை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதி ஆகிவிடும் என்று அரசியல் சாசன விதி 213 (2) (ஏ) குறிப்பிட்டுள்ளதால் அவசர சட்டம் காலாவதி ஆகியுள்ளது. ஆளுநர் கேட்ட சந்தேகங்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்த போதிலும் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான அவசர சட்டம் காலாவதி ஆகியிருப்பதால், மீண்டும் ஆன்லைன் சூதாட்டங்கள் தமிழகத்தில் தலைதூக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

முன்னதாக இவ்விவகாரம் குறித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:- ஆளுநரின் கடிதத்தில் சட்ட மசோதாவில் உள்ள சில சந்தேகங்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. ஆளுநர் விளக்கம் கேட்ட 24 மணி நேரத்தில் தமிழக அரசு விளக்கத்தை அனுப்பி வைத்தது. ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்று காத்திருக்கிறோம். அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க ஏன் தயக்கம் காட்டுகிறார் என்று தெரியவில்லை. இவ்விவகாரம் குறித்து நேரில் விளக்கம் அளிக்க ஆளுநரிடம் நேரம் கேட்டோம். ஆனால், சந்திக்க நேரம் கொடுக்கவில்லை” என்று கூறியிருந்தார்.