சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை எனும் கோரிக்கை உச்சத்தை பெற்றுள்ளது. வரும் 23 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டமும் செயற்குழு கூட்டமும் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்த கடந்த செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலாளர் கூட்டம் கூடியது. அப்போது ஒற்றைத் தலைமை குறித்து பேசியதாக ஜெயக்குமார் வெளியே வந்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்களும் ஈபிஎஸ் ஆதரவாளர்களும் மாறி மாறி போஸ்டர் ஒட்டி வரும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 5 நாட்களாக இரு தலைமைகளும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மீண்டும் ஒரு முறை அதிமுக பொதுக் குழு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லை. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஜெயக்குமார், வளர்மதி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனிடையே ஓபிஎஸ் தனது வீட்டில் ஆலோசனை நடத்திவிட்டு தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
அவர் வருவதை அறிந்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களான சிவி சண்முகம், ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தை வேகமாக முடித்துக் கொண்டு வெளியேறினர். அப்போது ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் ஓபிஎஸ் வருவதற்குள் ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டீர்களா என கேட்கப்பட்டது.
அதற்கு ஜெயக்குமார், ஓபிஎஸ் வருவதற்கும் கூட்டத்தை நாங்கள் முடித்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, வரும் 18ஆம் தேதி மீண்டும் கூட்டம் கூடி தீர்மானங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும் என்றார். இதையடுத்து காரில் ஏற சென்ற ஜெயக்குமாரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆபாசமாக திட்டினர்.
ஜெயக்குமாரால் கட்சி பாழாவதாகவும் விமர்சித்திருந்தனர். மேலும் ஜெயக்குமாரின் காரையும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமை நிர்வாக குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். அப்போது எடப்பாடி ஆதரவாளரான செல்லூர் ராஜூ வருகை தந்தார். அப்போது அங்கிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், பன்னீர் செல்வம் வாழ்க என கோஷமிட்டனர். இதையடுத்து ஜெயக்குமார் வருகை தந்தார். அப்போது அவரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டு ஓபிஎஸ் வாழ்க என கோஷமிட்டனர். இதையடுத்து ஜெயக்குமாரை அவரது ஆதரவாளர்கள் பாதுகாப்பாக உள்ளே அழைத்து சென்றனர். அப்போது அவர்கள் அண்ணன் டி ஜே வாழ்க என பதில் கோஷம் இட்டனர்.
Leave a Reply