சின்னம்மாவுடன் இணைந்து பொதுக்குழு நடத்த புதிய திட்டம் போட்ட ஓபிஎஸ்… விடாப்பிடியாக நிற்கும் எடப்பாடி..!!

சென்னை : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறிவரும் ஓபிஎஸ் விரைவில் சசிகலாவுடன் இணைந்து போட்டி பொதுக்குழு கூட்டம் ஒன்றை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், தனது தலைமை ஏற்றால் தான் பேச்சுவார்த்தை என எடப்பாடி பழனிச்சாமி விடாப்பிடியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்திற்கு இடையே ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இணைந்து செயல்படுவார்களா என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி நிற்கிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாகவே சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் நெருக்கடி தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மாதிரியான நிகழ்வுகள் நடைபெறவில்லை. ஆனால் அது விரைவில் நடைபெறும் என உறுதியாக சொல்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

இந்த நிலையில் சசிகலாவுடன் இணைந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆதரவு நிர்வாகிகள் இணைந்து போட்டி பொதுக்குழு கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிடபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மதுரை அல்லது சென்னையில் பிரம்மாண்டமான முறையில் இந்த பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளது ஓபிஎஸ் இதற்கான ஏற்பாடுகளும் மறைமுகமாக நடைபெற்று வருகிறது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் தற்போது சிறிது சிறிதாக ஓபிஎஸ் தரப்புக்கு தாவி வரும் நிலையில் புதிய தலைமைக்காக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களை நியமனம் செய்து அவர்களை வைத்து இந்த பொதுக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறது.

மேலும் ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உள்ள சில முக்கிய நிர்வாகிகள் சசிகலா வந்த பிறகு ஓபிஎஸ் பக்கம் சாய்வார்கள் எனவும் அவர்களை வைத்து பொதுக்குழு கூட்டத்தை நடத்தி எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு நெருக்கடி கொடுக்கவும் பொதுக்குழு கூட்டத்தை பயன்படுத்தவுள்ளார் ஓபிஎஸ்/ இந்த தகவல் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு சென்றதாகவும் கூறுகின்றனர்.

இந்நிலையில் சசிகலாவாக இருந்தாலும் சரி ஓபிஎஸ் ஆக இருந்தாலும் சரி டிடிவி தினகரனாக இருந்தாலும் சரி தனது தலைமையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் எனவும் அதுவரை நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் தான் தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற முடிவில் விடாப்பிடியாக இருக்கிறார் எடப்பாடி எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மூத்த நிர்வாகிகள் சிலருடன் ஆலோசனை நடத்தியதாகவும் எப்படி இருந்தாலும் அரசியலில் இதெல்லாம் சகஜம் கடைசிவரை உறுதியாக நிற்போம் என முடிவெடுத்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.